2016-10-04 17:20:00

புதிய கண்டுபிடிப்புக்கு வித்திட்ட மூவருக்கு இயற்பியல் விருது


அக்.04,2016. பிரித்தானியாவைப் பூர்வீகமாகக் கொண்ட மூன்று அறிவியலாளர்க்கு, 2016ம் ஆண்டின் நொபெல் இயற்பியல் விருது இச்செவ்வாயன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரான 82 வயது நிரம்பிய David Thouless, நியுஜெர்சி பிரின்ஸ்டன் பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியரான 65 வயது நிரம்பிய Duncan Haldane, ரோடு ஐலன்ட் ப்ரவுன் பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியரான 73 வயது நிரம்பிய Michael Kosterlitz ஆகிய மூவரும் இவ்விருதைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

குவாண்டம் கோட்பாட்டின்கீழ் வரும் பருப்பொருள் ஆய்வில் இதுவரை அறியப்படாத மூலக்கூறுகள்(Quantum matter) பற்றிய புதிய கண்டுபிடிப்புகளுக்காக இவர்களுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண பருப்பொருள் புரோட்டான்கள், நியூட்ரான்களால் ஆனது, ஆனால் இயற்பியலில் exotic matter என்பது அசாதாரண மூலகங்களைக் கொண்டது. இந்த ‘அன்னிய பருப்பொருள்’என்பதை dark matter (கண்டுபிடிக்கக் கூடிய எந்த கதிர்வீச்சையும் வெளிப்படுத்தாது) என்றுகூட அழைக்கலாம். ஆனால் இது பருப்பொருளுக்கு எதிரான கூறுகளையும் கொண்டதால், எதிர்ப் பருப்பொருள்(antimatter) என்றும் இது அழைக்கப்படுவதுண்டு. அதாவது இதுவரை கண்டுபிடிக்கப்படாத பலதரப்பட்ட கீழ்நிலை அணுமூலகங்களால் ஆன பருப்பொருள் எனலாம். கருந்துளைகளும் இதில் அடங்கும்.

இதுவரை அறியப்படாத பருப்பொருள் மூலக்கூறுகள் ஆய்வில் இம்மூவரும் மேற்கொண்ட பாதைத் திறப்பு ஆய்வுகளுக்காகவே தற்போது இயற்பியல் விருது வழங்கப்பட்டுள்ளது என, விருதுக் குழு கூறியது. இத்தகைய அறியப்படாத, வழக்கத்திற்கு மாறான பருப்பொருள் எடுக்கும் வழக்கத்துக்கு மாறான கட்டங்கள், அல்லது நிலைகள் பற்றிய அரிய ஆய்வாகும் இது. அதாவது அதிமின்கடத்திகள் (super conductors), அதிநீர்மங்கள் (superfluids), காந்தப்புல மென்படலங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய மிகவும் சிக்கலான கணிதவியல் மாதிரிகளைப் பயன்படுத்தினர். இவர்களது கண்டுபிடிப்பு எலக்ட்ரானிக்ஸ் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், 2016ம் ஆண்டின் நொபெல் மருத்துவ விருது, ஜப்பானிய உயிரியலாளர் Yoshinori Ohsumi என்பவருக்கு, இத்திங்களன்று அறிவிக்கப்பட்டது.

வருகிற வெள்ளியன்று, 2016ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது அறிவிக்கப்படும்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.