2016-10-04 17:27:00

வளரும் நாடுகளில், ஐந்து சிறாருக்கு ஒருவர் வறுமையில்


அக்.04,2016. வளரும் நாடுகளில், ஏறக்குறைய ஐந்து சிறாருக்கு ஒருவர் வீதம் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்கின்றனர் என்று, உலக வங்கியும், ஐ.நா.வின் யூனிசெப் நிறுவனமும் இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகின்றது.

ஒரு நாளைக்கு 1.9 டாலருக்கு குறைவான வருவாயில் வாழும் குடும்பங்களில், ஏறக்குறைய 38 கோடியே 50 இலட்சம் சிறார் வாழ்கின்றனர் என்று, அவ்வறிக்கை மேலும் கூறுகிறது. இச்சிறாரில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேற்பட்டோர், தெற்கு ஆசியாவில் உள்ளனர்.

மேலும், இந்தியாவில் வறுமை குறைந்து வருகின்றபோதிலும், அது முழுமையாக தீர்க்கப்படாத பிரச்சனையாகத் தொடர்கிறது என, இந்திய துணை அரசுத்தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்தார்.

கொல்கத்தாவில் நடந்த இந்திரா காந்தி நினைவு தேசிய ஒருமைப்பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஹமீது அன்சாரி அவர்கள், இந்தியாவில் 1974ம் ஆண்டில், வறுமையில் வாடிய மக்கள் 54.9 விழுக்காடாக இருந்தனர், அது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 27.5 விழுக்காடாகக் குறைந்தது என்று கூறினார்.

இந்தியாவில் வறுமைநிலை, தற்போது மேலும் குறைந்துள்ளது, எதிர்காலத்தில் அது மென்மேலும் குறையும். இருப்பினும் நாட்டில் வறுமை என்பது, மிகப்பெரிய சவாலாகவே உள்ளது என்றும், வறுமை முழுமையாகத் தீர்க்கப்பட முடியாமல் தொடர்கிறது என்றும், பேசினார் அன்சாரி

ஆதாரம் : BBC/தினமலர் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.