2016-10-05 17:37:00

இந்தோனேசிய இளையோர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாயின


அக்.05,2016. இந்தோனேசியாவின் மனாடோ (Manado) நகரின் கோனி (Koni) திறந்தவெளி அரங்கில், 2வது இந்தோனேசிய இளையோர் நாள் நிகழ்வுகள், அக்டோபர் 4, இச்செவ்வாயன்று ஆரம்பமாயின.

"இந்தோனேசிய பன்முகச் சமுதாயத்தின் நடுவில், நற்செய்தியின் மகிழ்வு" என்ற தலைப்பில் அக்டோபர் 1ம் தேதி முதல், 6ம் தேதி முடிய நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த இளையோர், பல்வேறு பங்குத் தளங்களில் உள்ள கத்தோலிக்க, கிறிஸ்தவ, இஸ்லாமிய குடும்பங்களில் தங்கியிருந்தது, முதல் 3 நாட்கள் அனுபவமாக இடம்பெற்றது.

முதல் மூன்று நாள் நிகழ்வுகளுக்குப் பின், இச்செவ்வாயன்று, மனாடோ நகரில் நிகழ்ந்த துவக்க விழாவில் கலந்துகொள்ள அங்கு கூடியிருந்த 2,500 இளையோர், தங்கள் நாட்டின் பாரம்பரிய உடைகளில் வந்திருந்தனர்.

இந்த ஆரம்ப விழாவில், இந்தோனேசிய திருப்பீடத் தூதர், பேராயர் Antonio Guido Filipazzi, மற்றும் இந்த இளையோர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ள ஆயர் Joseph Suwatan இன்னும் ஏனைய அரசியல் தலைவர்களும், நகரின் முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அசிசி நகர், புனித பிரான்சிஸ் திருநாள் திருப்பலியை ஆயர் Suwatan அவர்கள் தலைமையேற்று நடத்த, இந்தோனேசிய இளையோர் நாள் நிகழ்வுகள் துவங்கின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.