2016-10-05 17:30:00

பிளவுகள் இன்றி காப்பது தலைவர்களின் கடமை - கொலம்பிய ஆயர்கள்


அக்.05,2016. கொலம்பியா நாட்டில் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையை நிராகரித்து, மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பையடுத்து, அந்நாட்டில் மேலும் பிளவுகள் உருவாகாமல் காப்பது, தலைவர்களின் தலையாயக் கடமை என்று, கொலம்பிய ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கொலம்பிய அரசுக்கும், FARC எனப்படும் புரட்சிக் குழுவுக்கும் இடையே 52 ஆண்டுகளாக நீடித்துவந்த மோதல்களை முடிவுக்குக் கொணரும்வண்ணம், செப்டம்பர் 26ம் தேதி, கையெழுத்திடப்பட்ட ஓர் ஒப்பந்தத்தை, அக்டோபர் 2, இஞ்ஞாயிறன்று நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் மக்கள் நிராகரித்துள்ளனர்.

குறைவான எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்ற இந்த வாக்கெடுப்பில், இந்த ஒப்பந்தம் 'வேண்டாம்' என்று சொன்னவர்கள் 50.23 விழுக்காட்டினர் என்றும், 'வேண்டும்' என்று சொன்னவர்கள் 49.76 விழுக்காட்டினர் என்றும் பீதேஸ் (Fides) செய்திக்குறிப்பொன்று கூறியுள்ளது.

இந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து, நாட்டில் மீண்டும் பிளவுகள் தோன்றி, அமைதியைக் குலைப்பதற்கு வழி ஏற்படாமல் தடுப்பது தலைவர்களின் கடமை என்றும், எந்த கருத்து வேறுபாட்டையும் உரையாடல்களால் தீர்க்கமுடியும் என்றும், கொலம்பிய ஆயர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.