2016-10-05 17:11:00

வத்திக்கானில், மரியாவின் யூபிலி கொண்டாட்டங்கள்


அக்.05,2016. அக்டோபர் 7,8,9 ஆகிய மூன்று நாட்கள், வத்திக்கானில் இடம்பெறும் மரியாவின் யூபிலி கொண்டாட்டங்களைக் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புனித செபமாலை அன்னையின் திருநாளான, அக்டோபர் 7, இவ்வெள்ளி மாலை 6 மணிக்கு, புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்தில் நடைபெறும் துவக்கத் திருப்பலியைத் தொடர்ந்து, மாலை 7 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் செபமாலை சொல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி இரவு 8 மணியிலிருந்து, நள்ளிரவு முடிய உரோம்  நகரில் உள்ள பல கோவில்களில் திருநற்கருணை ஆராதனையும், ஒப்புரவு அருள் அடையாள வழிபாடும் தொடரும்.

அக்டோபர் 8, சனிக்கிழமை காலை 7 மணி முதல், நண்பகல் முடிய, உரோம் நகரின் நான்கு பசிலிக்காக்களில் அமைந்துள்ள புனிதக் கதவுகளை திருப்பயணிகள் கடந்து செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும், மாலை 5.30 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நடைபெறும் திருவிழிப்பு வழிபாட்டையும், செபமாலையையும் திருத்தந்தை முன்னின்று நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மரியாவின் யூபிலி கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்வாக, அக்டோபர் 9ம் தேதி, காலை 10.30 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலியையும், நண்பகல் மூவேளை செப உரையையும் வழங்குவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.