2016-10-06 15:55:00

தீவிரவாதத்தை, திருப்பீடம் முழுமையாகக் கண்டனம் செய்கிறது


அக்.06,2016. மதம், இனம், அரசியல் என்ற எந்த துறையினாலும், தீவிரவாதம் என்ற கொடுமைக்குக் காரணங்கள் சொல்லமுடியாது என்பதால், தீவிரவாதத்தை, திருப்பீடம் முழுமையாகக் கண்டனம் செய்கிறது என்று, ஐ.நா. அவையில் திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றிய பெர்னதித்தோ அவுசா அவர்கள் கூறினார்.

நியூ யார்க் நகரில் நடைபெற்றுவரும் ஐ.நா.அவையின் 71வது அமர்வில், "உலகளாவிய தீவிரவாதத்தை ஒழிக்கும் முயற்சிகள்" என்ற தலைப்பில் இடம்பெற்ற கூட்டத்தில், பேராயர் அவுசா அவர்கள் இவ்வாறு கூறினார்.

தீவிரவாதத்தில் ஈடுபடுவோர் நாடுகள் என்ற எல்லைகளைக் கடந்து செயலாற்றுவதால், இத்தீமையை அழிப்பதற்கு, அரசுகளும் எல்லைகள் என்ற கட்டுப்பாடுகளைத் தாண்டி, கூட்டுறவு முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் விண்ணப்பித்தார்.

தீவிரவாதிகளுக்குத் தஞ்சம் அளித்தல், அவர்களது செயல்பாடுகளுக்கு நிதி உதவி வழங்குதல் என்ற அனைத்து தவறுகளையும், அரசுகள் இணைந்து தடுத்தால் மட்டுமே, தீவிரவாதம் என்ற கொடுமையை இவ்வுலகிலிருந்து அழிக்க முடியும் என்று பேராயர் அவுசா அவர்கள் கூறினார்.

தீவிரவாதத்திற்கு எதிராக நாம் மேற்கொள்ளும் செயல்பாடுகள், இளையோரிடமிருந்து ஆரம்பமாகவேண்டும் என்று கூறிய பேராயர் அவுசா அவர்கள், மதம், மொழி, கலாச்சாரம், இனம் என்ற எல்லைகளைத் தாண்டி, அனைவரையும் மதிக்கும் வழிகளை இளையோருக்குச் சொல்லித் தருவது மிகவும் அவசியம் என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.