2016-10-08 15:48:00

ஹெய்ட்டிக்கு காரித்தாஸ், ஐ,நா. உதவிகள்


அக்.08,2016. ஹெய்ட்டியில், ‘மேத்யூ’கடும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம் ஏற்கனவே ஐம்பதாயிரம் யூரோக்களை, அந்நாட்டு காரித்தாஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

2010ம் ஆண்டில் கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்நாட்டில், நிவாரணப் பணிகளை ஆற்றிவரும் காரித்தாஸ் நிறுவனம், தற்போது, அவசரகால உதவியையும் வழங்கியுள்ளது.

ஹெய்ட்டியின் நிலைமை பற்றி பீதேஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய, அந்நாட்டின் காரித்தாஸ் தலைவர் Martine Haentjens அவர்கள், Les Cayes நகரில், எல்லாமே அழிக்கப்பட்டுவிட்டன என்றும், பாலங்களும், சாலைகளும் சேதமடைந்துள்ளன என்றும் கூறினார்.

இன்னும், ஹெய்ட்டியை சீரமைப்பதற்கும், காலாரா நோய்க்கெதிரான நடவடிக்கைக்குமென, ஐ.நா.வின் மனிதாபிமான அமைப்பு, ஐம்பது இலட்சம் டாலர் நிதி உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே, இந்நாட்டில், 2016ம் ஆண்டில், ஏறக்குறைய 27 ஆயிரம் பேர் காலரா நோயால் தாக்கப்பட்டுள்ளனர் மற்றும், 240க்கும் மேற்பட்டோர், காலராவால் இறந்துள்ளனர் என்று ஐ.நா. கூறுகிறது.  

ஹெய்ட்டி நாட்டை தாக்கிய மேத்யூ புயல், அமெரிக்க ஐக்கிய நாட்டின் புளோரிடாவைத் தாக்கி, பின்னர், சவனா, ஜார்ஜியா, சார்லஸ்டன், சவுத் கரோலினா, விமிங்டன், வடக்கு கரோலினா ஆகிய கடற்கரை நகரங்களை அச்சுறுத்த நகர்ந்துள்ளது என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : Fides /UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.