2016-10-12 16:30:00

கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளுக்கு 2016ம் ஆண்டு ஒரு மைல்கல்


அக்.12,2016. ஜார்ஜியா அசர்பைஜான் நாடுகளில் திருத்தந்தைக்குக் கிடைத்த விருந்தோம்பல் நட்புணர்வுடன் விளங்கியது என்றும், கத்தோலிக்க ஆர்த்தடாக்ஸ் உரையாடல் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜார்ஜியா அசர்பைஜான் நாடுகளில் திருத்தந்தை அண்மையில் மேற்கொண்ட திருத்தூது பயணம் குறித்து வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியொன்றில், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோக் அவர்கள் இவ்வாறு கூறினார்.

ஜார்ஜியா நாட்டில் திருத்தந்தை கொண்டாடிய திருப்பலியில், ஆர்த்தடாக்ஸ் சபையினரின் அதிகாரப்பூர்வ பங்கேற்பு இல்லையெனினும், திருத்தந்தையும், ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை 2ம் இலியா அவர்களும், ஒருவர் மீது  மற்றவர் காட்டிய மதிப்பு, வெளிப்படையாகத் தெரிந்தது என்று, கர்தினால் கோக் அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கு இடையே, இறையியல் அடிப்படையில் ஆழ்ந்த வேறுபாடுகள் இருந்தாலும், ஆன்மீகப் பயிற்சிகள், செப முயற்சிகள், பிறரன்புப் பணிகள் என்ற பல்வேறு தளங்களில் இரு சபைகளும் ஒன்றிப்பைக் கொணர முடியும் என்பதை, ஜார்ஜியா அசர்பைஜான் திருத்தூதுப் பயணம் உறுதிப்படுத்தியது என்று, கர்தினால் கோக் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டு பிப்ரவரி 12ம் தேதி, ஹவானாவில், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை கிரில் அவர்களுடனும், ஏப்ரல் 16ம் தேதி, லெஸ்போஸ் தீவில், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பார்த்தலோமேயு அவர்களுடனும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட சந்திப்புக்களை நினைவுகூர்ந்த கர்தினால் கோக் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளுக்கு 2016ம் ஆண்டு ஒரு மைல்கல் போல அமைந்துள்ளது என்று தன் பேட்டியில்  சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.