2016-10-12 16:26:00

பேரிடர் குறைப்பு உலக நாள் - ஐ.நா. பொதுச் செயலர் செய்தி


அக்.12,2016. பேரிடர்கள் ஏற்பட்ட பின்னர் பதிலிறுக்கும் நம் கலாச்சாரத்தை மாற்றி, பேரிடர்கள் வராமல் பாதுகாக்கும் மனநிலையை நாம் உருவாக்கினால், உயிர்கள் இழப்பை நாம் குறைக்க முடியும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

அக்டோபர் 13, இவ்வியாழனன்று கடைபிடிக்கப்படும் பேரிடர் குறைப்பு உலக நாளையொட்டி, 2016ம் ஆண்டுக்கென பான் கி மூன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், நமக்குச் சொந்தமான பொருள்களை இழந்தால், அவற்றை மீண்டும் நம்மால் பெற்றுக்கொள்ள முடியும், ஆனால், மனிதர்களை இழந்தால், அவர்களை மீளவும் பெற இயலாது என்று கூறியுள்ளார்.

1989ம் ஆண்டு ஐ.நா.பொது அவையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானத்தின்படி, ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் இரண்டாம் புதனன்று, இயற்கை பேரிடர் குறைப்பு உலக நாள் கடைபிடிக்கப்பட்டு வந்தது.

2009ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மற்றொரு தீர்மானத்தின் வழியாக, இயற்கை மட்டுமல்லாமல், மற்ற தாக்குதல்களால் உருவாகும் பேரிடர்களையும் மனதில் கொண்டு, இந்த நாள், பேரிடர் குறைப்பு உலக நாளென்று மாற்றி அமைக்கப்பட்டதுடன், இந்நாள் அக்டோபர் 13ம் தேதி கடைபிடிக்கப்படும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.

"அடுத்தத் தலைமுறைக்குச் சொல்ல வாழ்தல்: விழிப்புணர்வை அதிகரித்து, மரணத்தைக் குறைத்தல்" என்பது, 2016ம் ஆண்டு சிறப்பிக்கப்படும் பேரிடர் குறைப்பு உலக நாளின் மையப்பொருள் என்று ஐ.நா. அவை அறிவித்துள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.