2016-10-12 16:40:00

மனிதர்களை மையப்படுத்திய முன்னேற்றமே நம் இலக்கு


அக்.12,2016. 2030ம் ஆண்டுக்குள், நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளை நாம் அடைவதற்கு, பொருளாதார முன்னேற்றம் என்ற குறுகிய வட்டத்தைத் தாண்டி, மனிதர்களை மையப்படுத்திய முன்னேற்றத்தை நாம் இலக்காகக் கொள்ளவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

திருப்பீடத்தின் சார்பில், ஐ.நா. தலைமையகத்தில் தூதராகப் பணியாற்றும் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள், அக்டோபர் 11, இச்செவ்வாயன்று, ஐ.நா. பொது அவையின் 71வது அமர்வில், நீடித்திருக்கக்கூடிய முன்னேற்றம் என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் இவ்வாறு உரையாற்றினார்.

தனி மனிதருக்குரிய மாண்பில் துவங்கி, சமுதாய மாற்றம், பொதுநலம் என்ற இலக்குகளை நோக்கிச் செல்லும் முன்னேற்றத்தை அறிவுப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் ஒரு மனப் பக்குவமே, உண்மையான முன்னேற்றத்தை உருவாக்கும் என்ற கருத்தை, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் வலியுறுத்தினார்.

இலாபத்தையும், வர்த்தகப் போட்டியையும் மனதில் கொண்டு பேசப்படும் முன்னேற்றம், முழு மனித வளர்ச்சியையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் உறுதி செய்யாது என்று பேராயர் அவுசா அவர்கள் எடுத்துரைத்தார்.

தங்கள் தொழில் நிறுவனங்களின் இலாபத்தை மட்டுமே சிந்தித்து வரும் தொழிலதிபர்கள், வாழ்வின் உன்னதப் பொருளையும், பொதுநலனுக்குப் பயன்படும் வழிகளையும் சிந்திப்பதற்கு முன்வர வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பை, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் நினைவுகூர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.