2016-10-13 15:46:00

கத்தோலிக்க, லூத்தரன் திருப்பயணிகளைச் சந்தித்த திருத்தந்தை


அக்.13,2016. மோதல் என்ற நிலையிலிருந்து, ஒன்றிணைதல் என்ற நிலைக்கு அழைத்துச் செல்லும் பாதையில், லூத்தரன் சபையினரும், கத்தோலிக்கரும் இணைந்து நடப்பதற்காக இறைவனுக்கு நன்றி சொல்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைக் காண வந்திருந்த கத்தோலிக்க, லூத்தரன் திருப்பயணிகளிடம் கூறினார்.

லூத்தரன் சீர்திருத்த சபை துவங்கி 500 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி, ஜெர்மன் நாட்டிலிருந்து உரோம் நகருக்கு திருப்பயணம் மேற்கொண்டுள்ள 1000த்திற்கும் அதிகமானோரை, இவ்வியாழன் காலை, வத்திக்கான், அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இத்திருப்பயணிகளுடன், கத்தோலிக்க ஆயர்கள் இணைந்து வந்திருப்பதை சிறப்பாகக் குறிப்பிட்டார்.

லூத்தரன் சபையினரும், கத்தோலிக்கரும் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து சென்ற போதிலும், ஒரே மறையுடலின் உறுப்புக்கள் (1 கொரிந்தியர் 12:12-26) என்பதை உணர்ந்து, ஒன்றிப்புப் பயணத்தை மேற்கொண்டுள்ளோம் என்பதை தன் உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை.

சீர்திருத்த சபையின் 500ம் ஆண்டு நிறைவையும், லூத்தரன் கத்தோலிக்க உரையாடல் முயற்சியின் 50ம் ஆண்டு நிறைவையும் கொண்டாட இம்மாத இறுதியில் தான் சுவீடன் நாட்டுக்குச் செல்வதைக் குறித்து பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அனைவரும் இணைந்து, இறைவனின் இரக்கத்திற்கு சான்று பகர்வதையே இவ்வுலகம் எதிர்பார்க்கிறது என்று கூறினார்.

வந்திருந்த திருப்பயணிகளில், இளையோரை சிறப்பாக குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, இறையியல் அறிஞர்கள் பல கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட்டிருக்கும் வேளையில், லூத்தரன், கத்தோலிக்க இளையோர், ஒருவர், ஒருவரைச் சந்திப்பதிலும், இணைந்து, இரக்கச் செயல்கள் ஆற்றுவதிலும் கருத்தாய் இருக்குமாறு இளையோரிடம் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.