2016-10-13 15:32:00

"குடிபெயரும் குழந்தைகள், சக்தியற்றவர்கள், குரலற்றவர்கள்"


அக்.13,2016. மிகச்சிறியவர்களில் துவங்கி, மற்றவர்களை வரவேற்கும் பழக்கத்தை நாம் பின்பற்றினால், அந்தப் பாதை நம்மை இறைவனிடம் நடத்திச்செல்லும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக சமுதாயத்திற்கு விடுத்துள்ள ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

2017ம் ஆண்டு, சனவரி 15ம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள செய்தி, இவ்வியாழனன்று வத்திக்கானில் வெளியிடப்பட்டது.

"குடிபெயரும் குழந்தைகள், சக்தியற்றவர்கள், குரலற்றவர்கள்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள திருத்தந்தையின் செய்தி, "இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்" (மாற்கு 9:37) என்ற நற்செய்தி சொற்களுடன் துவங்குகிறது.

சிறுவர் சிறுமியரின் வர்த்தகம், பாலியல் கொடுமை, சிறார் படைவீரர், போதைப்பொருள் வர்த்தகத்தில் குழந்தைகளை ஈடுபடுத்துதல் போன்ற பல்வேறு கொடுமைகளை, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, மனசாட்சியற்ற மனிதர்கள் செய்யும் இக்கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருப்பது தவறு என்பதை வலியுறுத்தியுள்ளார்.

உலகெங்கும் பரவியுள்ள புலம்பெயர்தல் என்ற கொடுமையால், அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் என்பதால், அவர்களை, குறிப்பாக, தங்கள் குடும்பங்களை இழந்து, அனாதைகளாக விடப்பட்டுள்ள குழந்தைகளை, தன் செய்தியின் மையமாகத் தேர்ந்துள்ளதாக, திருத்தந்தை இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப்பூர்வ ஆவணங்கள் ஏதுமின்றி அனாதைகளாக்கப்படும் இக்குழந்தைகள், சக்தியற்றவர்களாக, குரல் எழுப்ப முடியாதவர்களாக இருப்பதை, தவறாகப் பயன்படுத்துவோரை, திருத்தந்தை, இச்செய்தியில் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

தங்கள் குழந்தைப் பருவத்திற்குரிய உரிமைகளை இழந்து நிற்கும் இக்குழந்தைகளுக்கு நம்மால் என்ன செய்யமுடியும் என்ற கேள்வியை எழுப்பும் திருத்தந்தை, இப்பிரச்சனையை நான்கு வழிகளில் அணுகும்படி நம்மை அழைக்கிறார்.

புலம்பெயர்தல் என்ற வரலாறு, மீட்பின் வரலாற்றுடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டது என்பதை விவிலிய எடுத்துக்காட்டுகளுடன் (விடுதலைப்பயணம் 22:21; இணைச்சட்டம் 10:19) கூறும் திருத்தந்தை, இந்தப் பிரச்சனையில் இறைவனின் பராமரிப்பு என்ற உண்மையை புரிந்துகொள்வது அவசியம் என்று எடுத்துரைத்துள்ளார்.

இறைவனின் பராமரிப்பை பெற்றுள்ள புலம் பெயர்ந்தோர், உண்மையில் மதிப்புள்ளவர்கள் என்பதை நாம் உணரவேண்டும் என்பதை முதல் கடமையாகச் சுட்டிக்காட்டும் திருத்தந்தை, புலம்பெயர்ந்தோரில் மிகவும் சக்தியற்றவர்களாக இருக்கும் குழந்தைகள், விற்பனைப் பொருளாகப் பயன்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத அநீதி என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

நாடுவிட்டு நாடு செல்லும் சிறுவர், சிறுமியரையும், வளர் இளம் பருவத்தினரையும் சமுதாயத்தின் ஓர் அங்கமாக இணைப்பது அடுத்த கடமை என்று கூறும் திருத்தந்தை, இந்தக் கடமையை நாம் செய்யத் தவறும்போது, மனசாட்சியற்ற குற்ற கும்பல்கள் இக்குழந்தைகளைத் தவறான வழிகளில் பயன்படுத்தும் ஆபத்து அதிகம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலம்பெயர்தல் என்ற கொடுமைக்கு பின்புலத்தில் இருக்கும், போர், வறுமை, அநீதிகள், ஊழல், மனித உரிமை மறுப்பு என்ற கொடுமைகளைக் களைவது மூன்றாவது கடமை என்று கூறும் திருத்தந்தை, இக்கொடுமைகளைக் களைவது, நீண்டகாலப் போராட்டமாக இருக்கும், எனவே, பொறுமை தேவை என்ற எச்சரிக்கையையும் தன் செய்தியில் விடுத்துள்ளார்.

புலம்பெயர்ந்துள்ள குழந்தைகளுக்கென பணியாற்றும் பலருக்கு, குறிப்பாக, இப்பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ள திருஅவை பணியாளர்களுக்கு, அனைத்து ஆதரவையும் வழங்குவது, திருத்தந்தை இச்செய்தியில் இறுதியில் விடுத்துள்ள சிறப்பான ஒரு வேண்டுகோள்.

புலம்பெயர்தல் என்ற கொடுமைக்கு உள்ளான திருக்குடும்பம், இன்று புலம்பெயர்ந்து வாடும் குழந்தைகளைக் காக்குமாறு செபித்து, ஆசீரை வழங்கி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2017ம் ஆண்டு, குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாளுக்கென வழங்கியுள்ள தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.