2016-10-19 15:28:00

வறுமையை முற்றிலும் அகற்ற முன்வரவேண்டும் - பேராயர் அவுசா


அக்.19,2016. உலகிலிருந்து வறுமையை போக்கும் முயற்சிகள், அண்மைய ஆண்டுகளில் வெற்றிபெற்றுள்ளதை பாராட்டும் திருப்பீடம், இந்த முயற்சிகளை இன்னும் தீவிரமாகப் பயன்படுத்தி, வறுமையை இவ்வுலகிலிருந்து முற்றிலும் அகற்ற நாம் முன்வரவேண்டும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நியூ யார்க் நகரில், ஐ.நா. தலைமையகத்தில் திருப்பீடத்தின் சார்பாக பணியாற்றும் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள், 71வது பொது அமர்வில், வறுமை ஒழிப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றத்தில், இச்செவ்வாயன்று, தன் கருத்துக்களை இவ்வாறு பதிவு செய்தார்.

பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக, உற்பத்தி செய்பவர்களாகவும், நுகர்வோர்களாகவும் மட்டும் மனிதர்களைப் பார்ப்பதை விடுத்து, அவர்களை, சமுதாய, அரசியல், ஆன்மீக சக்திகள் கொண்டவர்களாகப் பார்ப்பதே சிறந்ததென்று திருத்தந்தை அருளாளர் 6ம் பவுல் அவர்கள் கூறியதை, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

நலவாழ்வு, கல்வி, சமாதானச் சூழல் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் வழியாக முழுமனித வளர்ச்சியில் கவனம் செலுத்துவதே உண்மையான முன்னேற்றம் என்பது, கத்தோலிக்கத் திருஅவையில் கூறப்படும் உண்மையான முன்னேற்றம் என்று, பேராயர் அவுசா அவர்கள் எடுத்துரைத்தார்.

நீதியான, ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவதும், முன்னேற்ற இலக்குகள் நோக்கிய திட்டங்களில் வறியோரை இணைப்பதும் மனித சமுதாயம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

வறுமையை முற்றிலும் ஒழிக்கும் முயற்சிகளில் பெண்களும், பெண் குழந்தைகளும் இணைக்கப்படவேண்டும் என்றும், பெண்களுக்கு உரிய மதிப்பு வழங்கப்படாமல், எந்த முன்னேற்றமும் சாத்தியமில்லை என்றும், பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் கூறினார்.

வறுமை ஒழிப்பு என்ற கருத்தை ஐ.நா.அவை ஒரு தீர்மானமாக மேற்கொண்டதன் இருபதாவது ஆண்டை அடுத்த ஆண்டு சிறப்பிக்கும் வேளையில், வறுமை ஒழிப்பு குறித்த தகுதியான முயற்சிகளுக்கு நாம் முதலிடம் கொடுப்பது அவசியம் என்று, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையின் இறுதியில் நினைவுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.