2016-10-20 16:22:00

இஸ்ரேல், பாலஸ்தீனம் என்பவை, இரு வேறு நாடுகள் - திருப்பீடம்


அக்.20,2016. இஸ்ரேல், பாலஸ்தீனம் என்பவை, இரு வேறு நாடுகளாக இருப்பது குறித்து, 1947ம் ஆண்டு ஐ.நா.அவை பரிந்துரைத்த ஆலோசனையிலிருந்து, தற்போது நிலவும் சூழல், வெகு தூரம் விலகிச் சென்றிருப்பது, திருப்பீடத்திற்கு கவலை அளிக்கிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஐ.நா. தலைமையகத்தில் திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றும் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள், அக்டோபர் 19, இப்புதனன்று, ஐ.நா. பாதுகாப்பு அவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் இவ்வாறு கூறினார்.

இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்குமிடையே 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கி, இடம்பெற்றுவரும் மோதல்களும், வன்முறைகளும் பெரும் கவலையை உருவாக்கியுள்ளன என்று, பேராயர் அவுசா அவர்கள் வருத்தத்துடன் கூறினார்.

இஸ்ரேலும், பாலஸ்தீனமும் இரு வேறு நாடுகளாக இருப்பதையே திருப்பீடம் விரும்புகிறது என்று கூறிய பேராயர் அவுசா அவர்கள், பன்னாட்டு அரங்கங்களில் முடிவு செய்யப்பட்ட எல்லைகளை, இரு நாடுகளும் மதித்து வாழ்வது ஒன்றே, அப்பகுதியில் அமைதியைக் கொணரும் என்று வலியுறுத்தினார்.

யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று பெரும் மதங்களின் தொட்டிலாக விளங்கும் மத்திய கிழக்குப் பகுதிகளில், மனிதாபிமானமற்ற முறையில் வன்முறைகள் நிகழ்வது, ஏற்றுக்கொள்ள இயலாத அவலம் என்று, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் வருத்தத்துடன் எடுத்துரைத்தார்.

மனிதாபிமான உதவிகள் சென்றடைய முடியாத அளவு, அப்பகுதிகளில் நிலவிவரும் தாக்குதல்களால், கிறிஸ்தவர்களும், ஏனைய சிறுபான்மையினரும் முற்றிலும் அழிக்கப்படும் ஆபத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் விண்ணப்பித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.