2016-10-21 15:31:00

இறையழைத்தலுக்காக உழைப்பது, திருஅவையின் கடமை


அக்.21,2016. இறையழைத்தல்களின் மேய்ப்புப்பணி என்ற தலைப்பில், திருப்பீட குருக்கள் பேராயம் நடத்திய மூன்று நாள் கருத்தரங்கில் கலந்துகொண்ட 255 பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இறையழைத்தலுக்காக ஆற்றும் ஒவ்வொரு மேய்ப்புப்பணியிலும் மூன்று முக்கிய கூறுகள் அடங்கியுள்ளன என்று கூறினார்.

வெளியே வருதல், உற்றுநோக்குதல், அழைத்தல் என்ற மூன்று சொற்களை மையப்படுத்தி, தனது எண்ணங்களை எடுத்துரைத்த திருத்தந்தை, கிறிஸ்தவ மற்றும் குருத்துவ இறையழைத்தலுக்காகப் பணியாற்றுவதில், திருஅவையின் மேய்ப்பர்களாகிய ஆயர்களும், அருள்பணியாளர்களும் முக்கியமானவர்கள் என்று கூறினார்.

மேய்ப்பர்கள், மக்களை, குறிப்பாக, இளையோரை வரவேற்று, அவர்களோடு நேரம் செலவழித்து, அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை, குருத்துவ வாழ்வுக்கு ஆட்களைத் தெரிவுசெய்யும்போது, மேலெழுந்த வாரியாக நோக்காமல், மிகவும் விவேகத்துடனும், கவனத்துடனும் தெரிவுசெய்யுமாறு, ஆயர்களைச் சிறப்பான விதத்தில் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

பக்குவம் அடைந்த, சமநிலையிலுள்ள, இன்னும், இரக்கம், செவிமடுத்தல், மக்களுக்கு நெருக்கமாக வாழ்கின்ற அருள்பணியாளர்கள், திருஅவைக்கும், உலகத்திற்கும் தேவைப்படுகின்றனர் என்றும் கூறிய திருத்தந்தை, இயேசு தம் சீடர்களை அழைத்த விதம் பற்றியும் விளக்கினார்.

இந்தப் பணி எளிது அல்ல, ஆயினும், நற்செய்தியை அறிவிக்கவும், இளையோரைச் சந்தித்து, அவர்களை வழிநடத்தவும் அஞ்ச வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு சீடர்களை அழைத்தபோது, நீண்ட சொற்பொழிவுகளையோ, தயாராக வைத்திருந்த பதில்களையோ, திட்டங்களையோ வழங்கவில்லை, எடுத்துக்காடாக, மத்தேயுவிடம், என்னைப் பின்செல் என்று எளிமையாகக் கூறினார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறையழைத்தலுக்காக உழைப்பது, திருஅவையின் அடிப்படையான கடமையாகும் என்றும், மிகுந்த மனத்தாராளத்துடன் நாம் இப்பணியை ஆற்றுமாறு ஆண்டவர் நம்மிடம் கேட்கிறார் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறினார்.

இறையழைத்தல் என்பது ஆண்டவரைச் சந்திப்பதாகும், கிறிஸ்துவை நாம் ஏற்கும்போது, நம் சிறிய உலகின் மனவேதனைகளைப் புறந்தள்ளி, நம் வாழ்வில் ஒளிவீசும் கிறிஸ்துவில், தீர்மானத்துடன் வாழ உறுதிகொள்கிறோம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட குருக்கள் பேராயம், அக்டோபர் 19, இப்புதனன்று தொடங்கிய  மூன்று நாள் கருத்தரங்கு, இவ்வெள்ளியன்று நிறைவுக்கு வந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.