2016-10-22 15:29:00

காஸ்தெல் கந்தோல்ஃபோ மாளிகை பொதுமக்கள் பார்வைக்கு


அக்.22,2016. நூற்றாண்டுகளாக, திருத்தந்தையரின் கோடை விடுமுறை மாளிகையாக இருந்துவந்த, காஸ்தெல் கந்தோல்ஃபோவிலுள்ள அப்போஸ்தலிக்க மாளிகை, வரலாற்றில் முதல் முறையாக, பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விடப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வழங்கியுள்ள அனுமதியின்பேரில், அக்டோபர் 22, இச்சனிக்கிழமை முதல், காஸ்தெல் கந்தோல்ஃபோ மாளிகை, பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விடப்பட்டுள்ளது. இதில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களே, கடைசியாகத் தங்கியவர்.

திருஅவையின் கலைகள் மற்றும் அதன் வரலாற்றில் ஆர்வம் கொண்டிருக்கும் எல்லாருக்கும், திருத்தந்தையரின் அடிச்சுவடுகளில் பயணம் செய்வதற்கு, இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

உரோம் நகருக்கு தென்கிழக்கே, 15 மைல்கள் தூரத்தில், அல்பானோ ஏரிக்கரையில், அல்பான் குன்றுகளில் அமைந்துள்ள, இந்த மாளிகையில், சுவிஸ் பெரிய அறை, அரியணை அறை என, பல கலைவண்ணமிக்க அறைகள் உள்ளன.

திருத்தந்தையர்க்கு மட்டுமே உரிய இந்த மாளிகையின் வாசக அறையில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், விட்டுவந்த பென்சிலும், இரப்பரும் உள்ளன.

இந்த மாளிகை திறக்கப்படும் நிகழ்வுக்கென, சீனாவிலிருந்து, Guangzhou நாடக, இசை அமைப்பினர், இங்கு வந்து, “அழகு நம்மை ஒன்றிணைக்கிறது(beauty unites us)” என்று பொருள்படும், புகழ்பெற்ற சீனப் பாடல்களை இசைத்தனர். மேலும் பல கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

www.museivaticani.va என்ற இணையதளம் வழியாக, வத்திக்கான் அருங்காட்சியகம் மற்றும் காஸ்தெல் கந்தோல்ஃபோ அப்போஸ்தலிக்க மாளிகைக்கு, கட்டணச் சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.