2016-10-22 15:44:00

சிரியாவில் நடைபெறும் சண்டை கொடூரமானது


அக்.22,2016. சிரியாவில் நடைபெறும் சண்டையின் கொடூர விளைவுகள் அச்சமூட்டுகின்றன மற்றும் அவை, அப்பாவி மக்கள், திகிலூட்டும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ள வைக்கின்றன என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா. கூட்டம் ஒன்றில் கவலை தெரிவித்தார்.

சிரியாவில் மனித உரிமைகளின் நிலவரம் மற்றும் அலெப்போ நகரின் அண்மைய நிலைமை குறித்து, ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 25வது சிறப்பு அமர்வில், இவ்வெள்ளியன்று பேசிய, பேராயர் Ivan Jurkovic அவர்கள், இவ்வாறு கூறினார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. நிறுவனங்களுக்கான திருப்பீடப் பிரதிநிதியான பேராயர் Jurkovic அவர்கள், சிரியாச் சண்டையின் சிக்கலான நிலைமைக்கு, தூதரக உறவுகள் வழியாக, உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற, திருப்பீடத்தின் ஆவலை, பன்னாட்டு சமுதாயத்திற்கு முன்வைத்துள்ளார்.

சிரியாவில், உடனடியாக போர் நிறுத்தம் இடம்பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்திய பேராயர் Jurkovic அவர்கள், சிரியாவில் இடம்பெறும் மனிதமற்ற சண்டை உடனடியாக நிறுத்தப்படுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து விடுத்துவரும் அழைப்பையும் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.