2016-10-24 16:40:00

புனித 2ம் ஜான்பால், குடும்பங்களின் திருத்தந்தை - கர்தினால்


அக்.24,2016. மனிதகுலத்தின் வருங்காலம் குடும்பங்கள் வழியே உருவாக்கப்படுகிறது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள், குடும்பங்களின் திருத்தந்தை என்று பாராட்டினார், மும்பை கர்தினால், ஆசுவால்ட் கிரேசியஸ்.

மும்பை உயர் மறைமாவட்ட மனிதவாழ்வு பணிக்குழுவின் 20வது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசியக் கருத்தரங்கை துவக்கிவைத்து உரையாற்றிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

குடும்பத்திலும், சமுதாயத்திலும் நீதி மற்றும் விடுதலை குறித்தும், நன்னெறி அக்கறைகள், மற்றும், மறைப்பணி அணுகுமுறைகள் குறித்தும் விவாதிக்க உள்ள இக்கருத்தரங்கில், குடும்பத்தின் மீது அக்கறைகொண்டு செயல்பட்ட திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களை நினைவுகூர்வது சிறப்பு என்று, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

எதுவும் நிரந்தரமல்ல என்ற மனநிலை, தனிமனித முக்கியத்துவத்தை வலியுறுத்தல், அக்கறையற்ற தன்மை, நீடித்த அர்ப்பணங்களை மேற்கொள்ள இயலாத நிலை, சுயநலம் போன்ற குறைகளைத் தீர்ப்பது, இன்றையச் சவால்கள் என்று எடுத்துரைத்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இச்சவால்களை எதிகொள்ள, குடும்பங்களில் நாம் கற்றுக்கொள்ளும் மதிப்பீடுகள் பெரிதும் உதவும் என்று கூறினார்.

திருஅவையின் முக்கியப்பணியாக குடும்பங்களுக்கான மேய்ப்புப்பணி இருக்கவேண்டும் என்பதை, தன் உரையில் வலியுறுத்திக் கூறிய மும்பை கர்தினால் கிரேசியஸ் அவர்கள், குடும்பங்கள் தொடர்ந்து ஊக்கமளிக்கப்படுவதுடன், திருவழிபாடு மற்றும், அருளடையாளங்கள் வழியே ஆதரிக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.