2016-10-25 15:28:00

இறந்தவர்களை அடக்கம் செய்தல் பற்றிய திருப்பீட ஏடு


அக்.25,2016. இறந்தவர்களை அடக்கம் செய்தல் மற்றும் தகனம் செய்யப்பட்ட உடலின்  அஸ்தியைப் பாதுகாப்பது குறித்த அறிவுரைகள் அடங்கிய, “Ad resurgendum cum Christo” என்ற ஏட்டை, இச்செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டுள்ளது, திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம்.

திருஅவையில், தொன்மை காலத்திலிருந்தே வழக்கத்திலிருக்கும், இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறையை மீண்டும் பரிந்துரைத்துள்ள இவ்வேடு, இறந்தவர்களை தகனம் செய்யும் பழக்கத்திற்கு திருஅவை எதிராக இல்லை என்று கூறுகிறது.

இறந்த விசுவாசிகளின் உடல்களை, கல்லறைத் தோட்டங்களில் அல்லது மற்ற புனித இடங்களில் அடக்கம் செய்வது, அந்த உடலின் உயிர்ப்பில் கொண்டுள்ள விசுவாசத்தை உறுதிசெய்வதோடு, இறந்தவரின் உடல், அவரின் தனித்துவத்தின் ஓர் அங்கமாக இருக்கின்ற உணர்வோடு, அவரின் உடலின் மாண்புக்கு மிகுந்த மரியாதை செலுத்துவதாகவும் உள்ளது என்றும் அவ்வேடு கூறுகிறது.

நலவாழ்வு, பொருளாதார அல்லது சமூகக் கூறுகளால், இறந்த விசுவாசிகளின் உடல்களைத் தகனம் செய்யும் வழக்கத்திற்கு, திருஅவை எந்தவிதக் கோட்பாட்டு எதிர்ப்புக்களையும் தெரிவிக்கவில்லை, தகுந்த காரணங்களுக்காக, இவ்வாறு செய்யப்படும்போது, அந்த உடலின் அஸ்தி, புனித இடங்களில், கல்லறைத் தோட்டங்களில், சில விடயங்களில், ஆலயத்தில் அல்லது ஆலயப் பகுதியில் வைக்கப்பட வேண்டும் என்றும், இப்புதிய ஏடு கூறுகிறது.

அதேநேரம், இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள், கிறிஸ்தவ சமூகம் செபிக்கும் இடங்களாகவும், நினைவிடங்களாகவும், சிந்தனைக்குரிய இடங்களாகவும் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகின்றன என்றும், இதனால் அஸ்தி, தனிப்பட்ட வீடுகளில் வைக்கப்படக் கூடாது என்றும், அஸ்தியை நிலத்தில் தெளிப்பது அல்லது கடலில் கரைப்பது அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் கூறுகிறது அவ்வேடு.

கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எதிராக, உடலைத் தகனம் செய்வதற்கும், அஸ்தியை தெளிப்பதற்கும் கேட்பவர்களுக்கு, கிறிஸ்தவ அடக்கச் சடங்கு மறுக்கப்படும் என, “Ad resurgendum cum Christo” என்ற ஏடு ஊறுகிறது. இந்த ஏடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அனுமதியுடன் வெளியிடப்படுவதாகவும், அதில் கூறப்பட்டுள்ளது.

“Ad resurgendum cum Christo” என்ற ஏட்டை, திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத் தலைவர் கர்தினால் Gerhard Müller, அப்பேராயத்தின் ஆலோசகர் பேரருள்திரு Angel Rodríguez Luño, பன்னாட்டு இறையியல் குழுச் செயலர் அருள்பணி Serge-Thomas Bonino ஆகிய மூவரும் வெளியிட்டனர். இந்த ஏட்டில், கர்தினால் Gerhard Müller, விசுவாசக் கோட்பாட்டுப் பேராயச் செயலர் பேராயர் Luis F. Ladaria ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.