2016-10-25 15:07:00

இறையாட்சி, நிர்வாக அட்டவணைகளால் அல்ல, பணிவினால் வளர்கின்றது


அக்.25,2016. இறையாட்சி, அதன் உறுப்பினர்கள் காட்டும் பணிவினால் வளர்கின்றது என்றுரைத்த அதேவேளை, நிர்வாக அமைப்புக்களிலும், அதன் திட்ட அட்டவணைகளிலும் மிக அதிகமாகக் கவனம் செலுத்தும் கிறிஸ்தவர்களை எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில், இந்நாளைய வாசகங்களை மையப்படுத்தி  மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறையாட்சியின் இயல்பு பற்றிய  தன் சிந்தனைகளை வழங்கினார்.

இறையாட்சி என்றால் என்னவென்று விளக்கிய திருத்தந்தை, இறையாட்சி, தேக்க நிலையில் இருப்பதல்ல, அது நகர்ந்துகொண்டே இருப்பதாகும், அது, ஒவ்வொரு நாளும் தன்னையே புதுப்படைப்பாக்குகின்றது என்று கூறினார்.

இயேசு, தன் புளிப்புமாவு உவமையில், நம் அன்றாட வாழ்வு பற்றி எவ்வாறு பேசுகிறார் என்று கூறிய திருத்தந்தை, புளிப்பு, எப்போதும் புளிப்பாகவே இருப்பதில்லை, அது மாவோடு கலக்கின்றது, எனவே அது பயணம் செய்கின்றது, பின்னர் அது ரொட்டியாக மாறுகின்றது என்றும் கூறினார்.

முன்னோக்கிப் பயணம் செய்யாமல், சட்டத்தை மட்டும் பார்த்து, இறுகிய எண்ணம் கொண்டுள்ள மனிதரை எச்சரித்த திருத்தந்தை, இறுகிய மனிதருக்கு, போதகர்கள் இருப்பார்கள், ஆனால் தந்தை இருக்கமாட்டார் எனவும் கூறினார்.

தூய ஆவியாருக்கு நாம் காட்டும் பணிவின் வழியாக, இறையாட்சி வளர்கின்றது எனவும், இந்தப் பணிவென்னும் அருளை ஆண்டவரிடம் மன்றாடுவோம் எனவும் கூறி, தன் மறையுரையை நிறைவுசெய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.