2016-10-26 15:31:00

போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து விடுதலையளிக்கும் முயற்சி


அக்.26,2016. போதைப்பொருள் விற்பனை, மற்றும் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் மேற்கொண்டுள்ள போர் தொடர்ந்துவரும் சூழலில், போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து வெளியேற விழைவோருக்கு மணிலா உயர் மறைமாவட்டம் Sanlakbay என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இத்திட்டத்தை மணிலா பேராலயத்தில் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்த பேராயர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், போதைப்பொருள் கொடுமையை அகற்றுவது நம் பணியே தவிர, போதைப்பொருள் பயன்படுத்துவோரை உலகினின்று அகற்றுவது நம் குறிக்கோள் அல்ல என்று கூறினார்.

அரசுத் தலைவர் Rodrigo Duterte பதவியேற்றதிலிருந்து இதுவரை பல நூறு பேர் எவ்வித கேள்வியுமின்றி கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து, மனித உரிமை ஆர்வலர்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

அக்டோபர் மாதத் துவக்கத்தில் வெளியான ஒரு புள்ளிவிவரத்தின்படி, அரசுத் தலைவர் பதவியேற்றதிலிருந்து 734,231 போதைப்பொருள் வர்த்தகர்களும், பயன்பாட்டாளர்களும் சரணடைந்துள்ளனர் என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.