2016-10-27 15:54:00

உலகிலேயே சக்தி வாய்ந்தது, மனித உள்ளமே - ஐ.நா. பொதுச்செயலர்


அக்.27,2016. மனிதர்களை அழிக்க பயன்படுத்தப்படும் வெடிகுண்டுகளும் துப்பாக்கிக் குண்டுகளும் சக்தி வாய்ந்தவை என்று எண்ணுவது  தவறு, மாறாக, உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது, மனித உள்ளம்தான் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

2015ம் ஆண்டு சனவரியிலிருந்து, 2016ம் ஆண்டு ஜூன் மாதம் முடிய, ஐ.நா. அமைதிப்படையின் பணிகளில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருடன், அக்டோபர் 25, இப்புதனன்று, அவ்வீரர்களுக்கென நிகழ்ந்த ஒரு நினைவு அஞ்சலியில் பான் கி மூன் அவர்கள் இவ்வாறு கூறினார்.

உலகின் ஒவ்வொரு நாட்டிற்கும் உரிய கொடிகள் உள்ளன, ஆனால், அனைத்து நாடுகளையும் இணைக்கும் நீல நிற ஐ.நா. கொடியின் கீழ் பணியாற்றிய அமைதிப்படை வீரர்கள், பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அமைதி என்ற ஒரே குறிக்கோளுடன் பணியாற்றியவர்கள் என்று ஐ.நா.பொதுச் செயலர் சுட்டிக்காட்டினார்.

பன்னாட்டவராயினும், உயர்ந்த இலட்சியத்திற்காக உழைக்கும்போது, வேற்றுமைகள் நீக்கப்பட்டு, ஒற்றுமையும், கூட்டுறவும் பெருகும் என்பதற்கு, ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள் என்று, பான் கி மூன் அவர்கள் வலியுறுத்தினார்.

1948ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐ.நா. அமைதிப்படையில் இன்று, 111,512 ஆண்களும் பெண்களும் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.