2016-10-27 16:04:00

சாந்தா மார்த்தா குழுமத்திற்கு திருத்தந்தையின் பாராட்டு


அக்.27,2016. அடிமைத்தனத்தின் புது வடிவங்களாய் இன்று நிலவும் பல கொடுமைகளில் ஒன்றான மனித வர்த்தகத்தை தடுக்க உழைத்து வரும் சாந்தா மார்த்தா குழுமத்தை தான் பாராட்டுவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

மனித வர்த்தகத்தையும், இன்னும், அடிமைத்தனத்தின் பல்வேறு தீமைகளையும் தடுக்க, பன்னாட்டு காவல்துறை அதிகாரிகள், ஆயர்கள், மற்றும் சமுதாய ஆர்வலர்கள் இணைந்து உருவாக்கியுள்ள சாந்தா மார்த்தா குழுமத்தின் உயர் மட்டக் குழுவினரை, இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

இங்கிலாந்து கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் தலைமையில், தன்னைச் சந்தித்த இந்த உயர் மட்டக் குழுவினரைப் பாராட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறுமையின் பிடியில் சிக்கியுள்ள இளையோர், மனித வர்த்தகத்திற்கு உள்ளாவதைத் தடுக்க, சாந்தா மார்த்தா குழுமம் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மனித வர்த்தகத்தின் விளைவால், உடலாலும், உள்ளத்தாலும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாகும் வறியோர், தங்கள் உயிரையும் இழந்துவரும் கொடுமை, அண்மைய ஆண்டுகளில் கூடி வருகிறது என்ற கவலையை, திருத்தந்தை, இப்பிரதிநிதிகளிடம் பகிர்ந்துகொண்டார்.

சாந்தா மார்த்தா குழுமம் செயலாற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த பிரிதிநிதிகள், அக்டோபர் 26,27 ஆகிய இரு நாட்கள் உரோம் நகரில் தங்கள் திட்டக்குழு கூட்டத்தை மேற்கொண்ட வேளையில், அப்பிரதிநிதிகள் திருத்தந்தையைச் சந்தித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.