2016-10-28 15:36:00

இலங்கையில் காவல்துறை சித்ரவதைகள் நிறுத்தப்பட அழைப்பு


அக்.28,2016. இலங்கையில் காவல்துறை நடத்தும் சித்ரவதைகள் நிறுத்தப்படுமாறு, அந்நாட்டின் கத்தோலிக்க மற்றும் பிற மனித உரிமை நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

சித்ரவதைக்கு எதிரான ஐ.நா. அமைப்பு, இலங்கை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை குறித்துப் பேசிய, கண்டி மறைமாவட்ட மனித உரிமை அலுவலக இயக்குனர், அருள்பணி Nandana Manatunga அவர்கள், இலங்கை அரசு, காவல்துறை சித்ரவதைகள் குறித்த புகார்கள் பற்றி, பொதுவில் எதையும் அறிவிக்காமல் இருப்பதால், ஐ.நா.வின் இவ்வறிக்கை முக்கியமானது என்று கூறினார்.

சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படும் ஆள்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்கு, காவல்துறை சித்ரவதைகளைப் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது என்று மேலும் கூறினார் அருள்பணி Manatunga.

2015ம் ஆண்டில் மட்டும், காவல்துறை சித்ரவதைகளுக்கு எதிரான 400 புகார்கள், மனித உரிமைகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என, UCA செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : UCAN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.