2016-10-28 15:36:00

ஜம்மு-காஷ்மீர் அமைதிக்கான முயற்சிகளுக்கு கத்தோலிக்கர் ஆதரவு


அக்.28,2016.      இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், அமைதியைக் கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு, கத்தோலிக்கத் திருஅவை உட்பட, பல, அரசியல், சமய மற்றும் சமூக நிறுவனங்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன.

ஊரடங்குச் சட்டம், பதட்டநிலை, இராணுவ நடவடிக்கை போன்றவற்றை, நீண்ட காலமாக எதிர்கொண்டுவரும், ஜம்மு-காஷ்மீரின் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கத்தில், பாரதிய ஜனதா கட்சி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு, பிரிவினைவாத முஸ்லிம் தலைவர்கள் குழுவுடன், இச்செவ்வாயன்று உரையாடலைத் தொடங்கியுள்ளது.

இக்குழுவின் முயற்சியை வரவேற்றுப் பேசிய ஜம்மு-காஷ்மீர் மறைமாவட்டத்தின் அருள்பணி Prem Tigga அவர்கள், அப்பகுதியில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் வன்முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று விரும்புவதாகத் தெரிவித்தார்.

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், உரையாடலும், ஒப்புரவுமே, அமைதியைக் கொண்டு வருவதற்கு ஒரே வழி என்றும் கூறினார், அருள்பணி Tigga.

தெற்கு காஷ்மீரில், கடந்த ஜூலை 8ம் தேதி, பிரிவினைவாத புரட்சித்தலைவர் Burhan Muzaffar, காவல்துறையால் கொல்லப்பட்டதையடுத்து, கிளம்பிய மோதல்களில், ஏறத்தாழ 90 பேர் இறந்துள்ளனர் மற்றும் 11 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.  

பிரிவினைவாத முஸ்லிம் தலைவர்கள் குழுவுடன், தற்போது பேச்சுவார்த்தை நடத்திவரும் இக்குழு பற்றித் தெரிவித்த, யஷ்வந்த் சின்ஹா அவர்கள், இக்குழு, அதிகாரப்பூர்வ குழு இல்லையென்றும், இது தனிப்பட்டவர்களின் விருப்பத்தால் அமைக்கப்பட்டது என்றும் கூறினார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.