2016-10-29 16:01:00

நேபாளத்தில் தொடரும் சிறுமிகள் திருமணம்


அக்.29,2016. நேபாளத்தில், சிறுமிகள் திருமணம் என்ற, துன்ப நிகழ்வுகள் முடிவுக்கு வராதவைகளாக உள்ளன என்று, நேபாள காரித்தாஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

அக்டோபர் 22ம் தேதியன்று, நேபாளத்தில் கடைப்பிடிக்கப்பட்ட, உலக சிறுமிகள் தினத்தை முன்னிட்டு வெளியான புள்ளிவிபரங்களையொட்டி, கருத்துக்களை வெளியிட்ட நேபாள காரித்தாஸ் அதிகாரி Arpana Thapa அவர்கள், இவ்வாறு தெரிவித்தார்.

ஏழு வயது முதல், எட்டு வயதுக்குள்ளாக சிறுமிகள் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர், பள்ளிக்குச் செல்ல இயலாத இவர்கள், குடும்பங்களில் வன்முறை, உரிமை மீறல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளையும் எதிர்கொள்கின்றனர் என்று கூறினார் Arpana Thapa.

இவர்கள், சிறுமிகளாக இருக்கும்போதே கர்ப்பம் தரிக்கின்றனர், பாலியல் நடத்தையால் பரவும் HIV போன்ற நோய்களின் ஆபத்தையும் எதிர்கொள்கின்றனர் என்று மேலும் கூறினார் Arpana Thapa.

"Every Last Girl" என்ற தலைப்பில், Save the Children அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, ஒவ்வொரு ஏழு வினாடிக்கும், 15 வயதுக்குட்பட்ட சிறுமி, அவரைவிட வயதில் மிகவும் மூத்த ஆணுக்கு, கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கப்படுகின்றார்.  

ஆசியாவில், சிறார் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் நாடுகளில் நேபாளம், மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நாட்டில், குறைந்தது 37 விழுக்காட்டுச் சிறுமிகள், 18 வயதை எட்டும் முன்னர் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் என, நேபாள பெண்கள் மற்றும் சிறார் அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், உலகில், சிறு வயதில் திருமணமான பெண்களின் எண்ணிக்கை எழுபது கோடி, இது, 2030ம் ஆண்டில், 95 கோடியை எட்டும் என, யூனிசெப் கூறியுள்ளது. 

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.