2016-10-31 16:03:00

கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாட்டில் திருத்தந்தை வழங்கிய மறையுரை


அக்.31,2016. "நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள்" (யோவான் 15:4). சிலுவையில் தன் உயிரை வழங்குவதற்கு முன், இறுதி இரவுணவில் இயேசு கூறிய இச்சொற்கள், அவரது உள்ளத்தைப் பார்ப்பதற்கு உதவுகின்றன. அவரே உண்மையான திராட்சைக்கொடி, நாம் கிளைகள் என்பதையும், அவர் தந்தையோடு இணைந்திருப்பதுபோல், நாமும் அவருடன் இணைந்திருக்கவேண்டும் என்பதையும் இயேசு கூறுகிறார்.

வாழ்வுபெறும் பொருட்டு, கிறிஸ்துவோடு இணைத்திருக்கும் ஆவலை, Lund நகரில் நடைபெறும் இந்த செப வழிபாட்டில், நாம் வெளிப்படுத்த விரும்புகிறோம். பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் ஒப்புரவையும், ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு எடுத்துவரும் முயற்சிகளை எண்ணி, இறைவனுக்கு நன்றி சொல்லும் நேரம் இது. கத்தோலிக்கத் திருஅவையும், உலக லூத்தரன் கூட்டமைப்பும் இத்தகைய ஒப்புரவு பயணத்தை கடந்த 50 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறோம்.

திராட்சைச் செடியை நட்டு வளர்க்கும் தந்தை, (15:1), கனிகொடாத கொடிகளை தறித்துவிடுகிறார், கனிதரும் கொடிகளை மிகுந்த கனி தருமாறு கழித்து விடுகிறார். (15:2). நாம் கிறிஸ்துவோடு எப்போதும் இணைந்திருக்கிறோமா என்பதை அவர் கண்காணித்து வருகிறார் (15:4).

கடந்த காலத்தை, அன்போடும், நேர்மையோடும் நாம் பார்த்து, அங்கு நாம் செய்த தவறுகளை ஏற்று, மன்னிப்பு கேட்கவேண்டும். இறைவனே நமது நடுவராக இருக்கிறார். உண்மையான விசுவாசத்தைக் காப்பதற்கு, இரு தரப்பினரும், உண்மையான முயற்சிகளை மேற்கொண்டோம். அதேவேளையில், நமது நிலையிலேயே மூடப்பட்டு, அடுத்தவர் கண்ணோட்டத்தைப் பார்க்கத் தவறினோம்.

"வரலாற்றின் நடுவர்களாக நம்மையே உருவாக்கிக்கொள்ளாமல், உண்மையின் தூதர்களாக மாறுவதற்கு முயலவேண்டும்" என்று திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் கூறினார்.

"என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது" (15: 5) என்று இயேசு நமக்கு நினைவுறுத்துகிறார். நம்மிடையே உருவான பிரிவு, அதிகமான துயரங்களுக்கும், தவறான புரிதல்களுக்கும் காரணமாக அமைந்தது; அதே வேளையில், அவரின்றி நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வழிவகுத்தது.

திருஅவையின் வாழ்வில், புனித நூல் வகிக்கும் மையமான இடத்தைப் புரிந்துகொள்ள, சீர்திருத்த இயக்கம் உதவியது என்பதை நன்றியோடு ஏற்றுக்கொள்கிறோம். இதே இறை வார்த்தை, கடந்த 50 ஆண்டுகளாக நம்மை இணைத்து வந்துள்ளது. இறைவார்த்தை தொடர்ந்து நம்மை இன்னும் ஆழமாக இணைக்க வேண்டும் என்று இறைவனிடம் கேட்போம்.

இறைவன் இன்றி நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்ற ஆன்மீக அனுபவத்தை, மார்ட்டின் லூத்தர் நமக்கு முன் சவாலாக வைக்கிறார். மனிதர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் முன்னதாகவே, இறைவன் முதல் முயற்சியை எடுக்கிறார் என்பதை அவர் நமக்கு நினைவுறுத்துகிறார்.

தன் சீடர்கள் ஒன்றாய் இருப்பதன் வழியே, "உலகம் நம்பும்" (யோவான் 17:21) என்று வேண்டிய இயேசு, நம் ஒற்றுமைக்காகவும் இறைவனிடம் பரிந்து பேசுகிறார். நாம் ஒருவரை ஒருவர் எவ்வளவு தூரம் மன்னிக்கிறோமோ, அவ்வளவு தூரம், இறைவனின் இரக்கத்திற்கு நாம் சாட்சிகளாக இருக்கமுடியும். மன்னிப்பு, மறுமலர்ச்சி, ஒப்புரவு ஆகியவை ஒவ்வொரு நாள் அனுபவங்களாக மாறும்போதுதான் நாம் இறைவனின் இரக்கத்திற்கு சாட்சி பகர முடியும்.

இறைவன் இன்றி நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை மனதில் இறுத்தி, லூத்தரன் சபையினராகவும், கத்தோலிக்கராகவும் இணைந்து, நாம் இந்த பேராலயத்தில் செபிக்கிறோம். இறைவனின் இரக்கத்திற்கும் அன்பிற்கும் ஏங்கி நிற்கும் இவ்வுலகிற்கு, இரக்கமே உருவான நம் இறைவனின் வார்த்தையை இணைந்து பறைசாற்ற, தேவையான அருளைத் தர, ஒன்று சேர்ந்து, இறைவனிடம் செபிக்கிறோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.