2016-11-01 14:13:00

திருத்தந்தையின் சுவீடன் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயணம்


நவ.01,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ட்டின் லூத்தரின் சீர்திருத்தம் தொடங்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக, இத்திங்கள், இச்செவ்வாய் தினங்களில் சுவீடனுக்கு இரு நாள்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார். ஆனால், இவ்விரு நாள்களிலும், சுவீடனின், மால்மோ மற்றும் Lund நகரங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை நோக்கும்போது, கத்தோலிக்கருக்கும், லூத்தரன் சபையினருக்குமிடையே, தற்போது நிலவும் நல்லுறவை, மேலும், சிறப்புறச் செய்யும் நோக்கத்தில் நடைபெற்றதாகவே தெரிகிறது. Lund நகர் லூத்தரன் பேராலயத்தில் நடந்த, கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டிற்கு திருத்தந்தை சென்றபோது, அப்பேராலய மணிகள் ஒலித்தன. பலத்த கைதட்டல்களும் எழும்பின. சுவீடன் அரசர் 16ம் கார்ல் குஸ்தாவ், அரசி சில்வியா ஆகியோர் கலந்துகொண்ட இவ்வழிபாட்டில், உலகின் பல பகுதிகளிலிருந்தும் லூத்தரன் சபையினர் கலந்துகொண்டனர். இவ்வழிபாட்டின் இறுதியில், திருத்தந்தையும், லூத்தரன் கூட்டமைப்புத் தலைவரும் கையெழுத்திட்ட அறிக்கையிலும், திருஅவையில் இடம்பெற்ற பிரிவினைக்காக மனம்வருந்தி, ஒன்றிப்புக்காக, மேலும் அதிகமாக உழைப்பதற்கே உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஐம்பது ஆண்டுகளாக, இவ்விரு சபைகளுக்கும் இடையே இடம்பெற்றுவரும் உரையாடல்கள், பல்வேறு வேறுபாடுகளைக் களைவதற்கும், ஒருவர் ஒருவரை, மேலும் அதிகமாகப்  புரிந்துகொள்ளவும், நம்பிக்கை கொள்ளவும் உதவியுள்ளன என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திருத்தந்தை ஒருவர், இந்த லூத்தரன் பேராலயத்திற்குச் சென்றது இதுவே முதன் முறையாகும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்திகளில், “கிறிஸ்தவ ஒன்றிப்பே நமது முன்னுரிமை. ஏனென்றால், நம்மைப் பிரிப்பதைவிட, நம்மை இணைப்பதே அதிகமான காரியங்களை ஆற்றுகின்றது என்று நாம் உணருகின்றோம் எனவும், கிறிஸ்தவர்கள் எப்பொழுதும், ஒன்றிணைந்து இருப்பதற்கு, ஒளியும், வாழ்வுமாக அமைந்துள்ள, நம் ஆண்டவரின் திருச்சொற்கள் உதவுவதற்கு, அவரிடம் மன்றாடுவோம்” எனவும் உள்ளன. எனவே, கிறிஸ்தவ ஒன்றிப்பை மையப்படுத்திய திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம், 84 விழுக்காட்டு லூத்தரன் கிறிஸ்தவ சபையினரைக் கொண்ட சுவீடன் நாட்டில், கத்தோலிக்கர் மற்றும், லூத்தரன் சபையினரின் உறவுகளில், ஒரு புதிய தொடக்கமாக அமைந்துள்ளது எனச் சொல்லப்படுகின்றது. சாம்பியா நாட்டில், கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும் இணைந்து, எய்ட்ஸ் நோய், மலேரியா நோய்கள் ஒழிப்பு போன்ற சமூகநல நடவடிக்கைகளில் ஏற்கனவே ஈடுபட்டு வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.