2016-11-02 15:36:00

மனித உரிமையின் அடித்தளம் - ஐ.நா. அவையில், பேராயர் அவுசா


நவ.02,2016. மனித உரிமைகளை பாதுகாப்பது, மற்றும் வளர்ப்பது குறித்து, ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றுவரும் மனம் திறந்த உரையாடலைக் கண்டு, திருப்பீடம் மகிழ்ச்சி கொள்கிறது என்று, ஐ.நா. அவை கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர், பெர்னார்த்தித்தோ அவுசா அவர்கள் கூறினார்.

நியூ யார்க் நகரில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் ஐ.நா. பொது அவையின் 71வது அமர்வில் உரையாற்றிய பேராயர் அவுசா அவர்கள், மனித உரிமையின் அடித்தளம், நாம் அனைவருமே சமமாகக் கொண்டிருக்கவேண்டிய அடிப்படை மனித மாண்பு என்றும், கருவிலிருந்து கல்லறை முடிய மனித உயிர் மதிக்கப்படவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

கருவில் வளரும் குழந்தை, மோதல்களில் பலியாகும் மனிதர்கள், வயது முதிர்ந்தோர், மரண தண்டனைக் கைதிகள் ஆகியோரின் உயிர்கள் மதிக்கப்படுவதில்லை என்று, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் கவலை வெளியிட்டார்.

"மரண தண்டனை எவ்விதத்திலும் நீதியை நிலைநாட்டுவது கிடையாது, மாறாக, அது பழிக்குப் பழி என்ற உணர்வை மேலும் தூண்டிவிடுகிறது" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஜூன் மாதம் நார்வே நாட்டின் ஆஸ்லோ நகருக்கு அனுப்பிய காணொளிச் செய்தியில் கூறியதை, தன் உரையில் எடுத்துரைத்த பேராயர் அவுசா அவர்கள், உலகின் பல நாடுகளில் மரண தண்டனையை ஒழிப்பதற்கு முயற்சிகள் வளர்ந்துவருவதைப் பாராட்டினார்.

ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான மத உரிமை, அண்மைய ஆண்டுகளில், அதிகமாக பறிக்கப்பட்டு வருவது குறித்து கவலை வெளியிட்ட பேராயர் அவுசா அவர்கள், மதங்களின் பெயரால் உருவாகியுள்ள அடிப்படைவாத குழுக்கள், இந்த உரிமையைப் பறிப்பது, பெரும் துயரத்தைத் தருகிறது என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.