2016-11-03 15:40:00

அனைத்து ஆன்மாக்களின் திருநாளில் திருத்தந்தையின் மறையுரை


நவ.03,2016. கல்லறைகளுக்குச் செல்லும்போது, கண்ணீருடன், வருத்தத்துடன் நாம் சென்றாலும், நம் கரங்களில் சுமந்து செல்லும் மலர்கள், நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் மாலை நிறைவேற்றிய சிறப்புத் திருப்பலியில் மறையுரை வழங்கினார்.

நவம்பர் 2, இப்புதன் சிறப்பிக்கப்பட்ட அனைத்து ஆன்மாக்களின் திருநாளையொட்டி, உரோம் நகரின் 'Prima Porta' கல்லறையில், மாலை 4 மணிக்கு திருப்பலி நிறைவேற்றிய வேளையில், கல்லறைக்கு நாம் கொணரும் நம்பிக்கை, நாம் ஒருநாள் இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு உதவியாக உள்ளது என்று, தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

உயிர்ப்பு உண்டு என்ற ஆணித்தரமான உண்மையே நமக்கு இந்த நம்பிக்கையைத் தருகிறது என்று கூறியத் திருத்தந்தை, உயிர்த்தெழுந்த இயேசு இந்த நம்பிக்கையை நமக்களிக்கிறார் என்று வலியுறுத்தினார்.

அனைத்து ஆன்மாக்கள் திருநாளில், திருத்தந்தையர் பொதுவாக Campo Verano கல்லறைக்குச் செல்வது வழக்கம் என்றாலும், இம்முறை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரின் வட எல்லையில் உள்ள 'Prima Porta' கல்லறையில் திருப்பலி நிறைவேற்றினார்.

345 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள 'Prima Porta' கல்லறையில், கத்தோலிக்கர்கள், எவஞ்செலிக்கல் சபையினர், யூதர் மற்றும் இஸ்லாமியர் அனைவரின் கல்லறைகள் அமைந்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.