2016-11-03 15:05:00

இது இரக்கத்தின் காலம் : இழப்பை நினைத்து வருந்துவதால் பயன்!


ஒரு பெரிய காட்டில், இரண்டு குருவிகள் கூடுகட்டி குடும்பம் நடத்தி வந்தன.  ஒருநாள், பெண் குருவி, கூட்டில் நிறைய முட்டைகளை இட்டு வைத்திருந்தது. பகல் நேரத்தில், அந்தப் பக்கமாக, ஒரு பெரிய யானை வந்தது. நிழலுக்காக அந்த மரத்தடியில் நின்ற யானை, விளையாட்டாக, தனது தும்பிக்கையை உயரே தூக்கி, தும்பிக்கைக்கு எட்டக்கூடிய மரக்கிளைகளெயல்லாம் ஒடித்து கீழே போட்டுக்கொண்டிருந்தது. அவ்வாறு ஒடிந்து விழுந்த கிளைகளில், குருவி, கூடு கட்டியிருந்த கிளையும் கீழே விழுந்த காரணத்தினால், குருவிக் கூட்டிலிருந்த முட்டைகள் அனைத்தும் நாசமாகிவிட்டன. குருவிகள் இரண்டும் அந்நேரத்தில் அங்கு இல்லாததால், நல்ல வேளையாக, தப்பித்துக்கொண்டன. மாலையில் அந்தக் குருவிகள் திரும்பி வந்தன. தான் இட்ட முட்டைகள் எல்லாம் உடைந்து, பாழாகிப் போயிருந்ததைக் கண்டு, பெண் குருவி மிகவும் வேதனையடைந்து, கண்ணீர் வடித்தது. இதைப் பார்த்த, அக்குருவியின் தோழியான மரங்கொத்தி குருவி விரைந்து சென்று ஆறுதல் கூறியது. தோழியே, நடந்துபோன துயர நிகழ்வை எண்ணியெண்ணி அழுவதனால் என்ன பயன்? அறிவுள்ளவர்கள், இறந்துபோன தங்களின் அன்புக்குரியவர்கள் பற்றியும், காணாமல்போன தங்களின் அரிய பொருள்கள் பற்றியும், கலக்கமடைந்து வருந்தமாட்டார்கள். இறந்துபோன நம் அன்புக்குரியவர்களை நினைத்து நாம் வருந்தினால், மேலுலகில் இருக்கும் அவர்களின் ஆத்மா சாந்தியடையாது என்று ஆறுதல் சொன்னது.

ஆம். இறந்த பின்னர், வாழ்வு மாறுபடுகிறதேயன்றி, அழிந்துபோவதில்லை. இறந்த உடல்களை மலர்களால் நிரப்புவதைவிட, அவர்கள் வாழும்போதே, அவர்களை, அன்பு மலர்களால் நிரப்பலாமே.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.