2016-11-04 14:30:00

இறந்த கர்தினால்கள், ஆயர்களுக்காக திருத்தந்தை திருப்பலி


நவ.04,2016. இறந்த கர்தினால்கள், ஆயர்கள் ஆகியோரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக நாம் செபிக்கும் இவ்வேளையில், அவர்கள் விட்டுச் சென்ற, கிறிஸ்தவ மற்றும் குருத்துவ சான்று வாழ்வைப் பாராட்டி, இறைவனுக்கு நன்றி சொல்வோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறினார்.

கடந்த பன்னிரண்டு மாதங்களில், இறந்த கர்தினால்கள், ஆயர்கள் ஆகியோரின் ஆன்ம சாந்திக்காக, இவ்வெள்ளி காலை 11.30 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், கூட்டுத்திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

அருள்பணியாளர்களுக்கும், ஆயர்களுக்கும் இறைத்தந்தையின் விண்ணக வீட்டுக்குச் செல்லும் பாதை, “இதோ நான் இருக்கிறேன்” என்று, அவர்கள், குருத்துவத் திருப்பொழிவின்போது, சொன்ன நேரத்திலே தொடங்கிவிடுகின்றது என்றும்,  இறுதியில், மரண நேரத்தில், “இதோ நான் இருக்கிறேன்” என்று சொல்லி, இயேசுவோடு இணைகின்றனர் என்றும், மறையுரையில் கூறினார் திருத்தந்தை.

கிறிஸ்துவின் மரணத்தையும், உயிர்ப்பையும் நினைவுகூரும் இத்திருப்பலியில், இறந்த நம் கர்தினால்களும், ஆயர்களும், நமக்கும், திருஅவைக்கும் ஆற்றிய பணிகளுக்கு நன்றி செலுத்துவோம் என்றும், அவர்களின் ஆன்மா இறைவனில் என்றென்றும் இளைப்பாறச் செபிப்போம் என்றும், திருத்தந்தை கூறினார்.

இறந்த நம் கர்தினால்கள் மற்றும், ஆயர்களின் கரங்களும், வார்த்தைகளும், இரக்கமும், மன்னிப்பும் நிறைந்த இறைவனின் பெயரில், மக்களுக்கு ஆறுதல் அளித்து அவர்களின் கண்ணீரைத் துடைத்துள்ளன, அவர்களின் பிரசன்னம், இறைவனின் வற்றாத நன்மைத்தனத்திற்கும், இரக்கத்திற்கும் சான்று பகர்ந்துள்ளன என்றும் பாராட்டிப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2015ம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கி, இவ்வாண்டு அக்டோபர் மாதம் முடிய, இறையடி சேர்ந்த கர்தினால்கள், ஆயர்கள் ஆகியோர் இத்திருப்பலியில் நினைவுகூரப்பட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.