2016-11-04 14:38:00

இறைவன் நம்மை எப்பொழுதும் கவனித்துக் கொண்டிருக்கிறார்


நவ.04,2016. “எப்பொழுதும் நம்மை உற்று நோக்கிக்கொண்டிருக்கும் இறைவனின் கனிவை உணர்வோம். தம் மகன் இயேசுவில், உயிருள்ள கிளைகளாக நாம் இணைந்து வாழவேண்டுமென்று, அவர் ஆவல் கொள்கிறார்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டிருந்தன.

மேலும், இந்த நவம்பர் மாதத்தில், இறந்த அனைத்து ஆன்மாக்களையும் நினைவுகூர்ந்து, அவர்களுக்காக, இறைவனிடம் சிறப்பாகச் செபிக்கும்வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்திற்குக் கீழ்ப்பகுதியிலுள்ள கல்லறைகளைத் தரிசித்து, அங்குச் செபித்தார்.

பத்தாம் நூற்றாண்டிலிருந்து, இறந்த அரசர்கள், அரசிகள், மற்றும் திருத்தந்தையர் சிலரின் கல்லறைகள், புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்திற்குக் கீழ்ப்பகுதியில் உள்ளன.

இருபதாம் நூற்றாண்டில் இறந்த, திருத்தந்தையர் 15ம் பெனடிக்ட், 11ம் பத்திநாதர், 12ம் பத்திநாதர், அருளாளர் ஆறாம் பவுல், முதலாம் ஜான் பால் ஆகியோரின் கல்லறைகளில், இறந்த அனைத்து ஆன்மாக்கள் நினைவு நாளன்று செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.