2016-11-04 15:05:00

பாகிஸ்தான் திருஅவை குழுக்களுக்கு பன்னாட்டு அமைதி விருது


நவ.04,2016. பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழுவுக்கும், மனித உரிமைகள் குழுவுக்கும், 2016ம் ஆண்டின், Pax Christi உலக அமைதி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருது குறித்து, அறிக்கை வெளியிட்டுள்ள, உலக Pax Christi அமைப்பு, பாகிஸ்தானில், மனித உரிமைகளைக் காப்பதற்கு, வன்முறையற்ற வழிகளில், இவ்விரு குழுக்களும் போராடி வருகின்றன என்று கூறியுள்ளது.

திட்டமிட்ட கைதுகள், சித்ரவதைகள், தடுப்புக்காவல் மரணங்கள், கட்டாயக் காணாமல்போதல், சமய சிறுபான்மையினர்க்கெதிரான அமைப்புமுறை அநீதிகள், சட்டத்துக்குப் புறம்பே தூக்கிலிடுதல்கள் ஆகியவை, அடிக்கடி இடம்பெறும் ஒரு நாட்டில், இந்தக் குழுக்கள், வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக, துணிச்சலுடன், தெளிவான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன என்றும், Pax Christi அமைப்பு கூறியது.

ஜெனீவாவில் உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தின் ஆலயத்தில், இம்மாதம் 17ம் தேதி, நடைபெறும் நிகழ்வில், இவ்விரு குழுக்களுக்கும் விருதுகள் வழங்கப்படும்.

கர்தினால் Bernardus Alfrink அவர்களால், 1988ம் ஆண்டில் இந்த அமைதி விருது உருவாக்கப்பட்டது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.