2016-11-05 15:29:00

மனித வர்த்தகத்திற்கு எதிராக உலகளாவிய அருள்சகோதரிகள்


நவ.05,2016. மனித வர்த்தகம் மற்றும், இதில் பெண்கள் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்துவதற்கு உழைத்துவரும், உலகளாவிய அருள்சகோதரிகள் அமைப்பின் ஐரோப்பிய கிளை, இஞ்ஞாயிறன்று உரோமையில் கூட்டம் ஒன்றைத் தொடங்குகின்றது.

RENATE என்ற இந்த ஐரோப்பிய கிளை, வருகிற புதன்கிழமைவரை நடத்தும் இக்கூட்டம் குறித்து, செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய, நைஜீரிய அருள்சகோதரி மோனிக்கா சிக்வே அவர்கள், துன்பம் நிறைந்த பாலியல் தொழில் பிரச்சனை, மனித வர்த்தகத்தின் ஓர் அங்கமாக இருக்கும்போது, மிகவும் கொடுமையானதாக மாறுகின்றது என்று தெரிவித்தார்.

மாஃபியா திட்டமிட்டக் குற்றக் கும்பல்கள், வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, இளம்பெண்களை, அவர்கள் நாடுகளிலிருந்து கொண்டுவந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றன என்றும் கூறினார் அருள்சகோதரி மோனிக்கா.

மனித வர்த்தகத்தை ஒழிப்பதற்காக, திருப்பீடத்தில் உருவாக்கப்பட்டுள்ள சாந்தா மார்த்தா குழுவை வரவேற்றுப் பேசிய அச்சகோதரி, தங்கள் அமைப்பினர், திருத்தந்தையையும் சந்திக்கவிருப்பதாக அறிவித்தார்.   

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.