சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ உலகம்

வறிய கிளாரா சகோதரிகளுக்கு கர்தினால் பிலோனியின் மறையுரை

திருப்பலி நிறைவேற்றும் கர்தினால் பெர்னாண்டோ பிலோனி - REUTERS

07/11/2016 16:02

நவ.07,2016. வறிய கிளாரா துறவு சபையில் வாழும் சகோதரிகள், தங்கள் எடுத்துக்காட்டான வாழ்வாலும், தொடர்ந்த செபங்களாலும் தலத்திருஅவைக்கு பெரும் உதவியாக உள்ளனர் என்று, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள், இத்திங்களன்று மறையுரை வழங்கினார்.

நவம்பர் 3ம் தேதி முதல், 7ம் தேதி முடிய, மலாவி நாட்டில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட கர்தினால் பிலோனி அவர்கள், லிலோங்க்வே (Lilongwe) எனுமிடத்தில் உள்ள வறிய கிளாரா துறவு மடத்தில், இத்திங்கள் காலை ஆற்றியத் திருப்பலியில் இவ்வாறு மறையுரை வழங்கினார்.

"மலைமேல் இருக்கும் நகராகவும், விளக்குத் தண்டின் மீது வைக்கப்பட்ட விளக்காகவும்" துறவு இல்லங்கள் உள்ளன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய சொற்களை, தன் மறையுரையில் குறிப்பிட்ட கர்தினால் பிலோனி அவர்கள், லிலோங்க்வே துறவு இல்லம், மலாவி தலத்திருஅவைக்கு உன்னதமான ஒரு கொடை என்றும், இதனால், அப்பகுதியில் இறை அழைத்தல்கள் பெருகியுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

இறைவனின் திருமுகத்தைக் காண்பது, அடைபட்ட துறவிகளின் அழைப்பு என்று தன் மறையுரையில் எடுத்துரைத்த கர்தினால் பிலோனி அவர்கள், இறைவனைத் தொடர்ந்து தேடுவதும், அவரைக் கண்டதால் உண்டான மகிழ்வை வெளிப்படுத்துவதும், இன்றைய துறவிகள் அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு என்று கூறினார்.

துறவிகள் மேற்கொள்ளும் குழும வாழ்வு, மூவொரு இறைவனின் கூட்டு வாழ்வை வெளிப்படுத்தும் அடையாளம் என்று, வறிய கிளாரா சகோதரிகளுக்கு நினைவுறுத்திய கர்தினால் பிலோனி அவர்கள், குழும வாழ்வில் ஒருவருக்கொருவர் அளிக்கும் மன்னிப்பில் தாராளமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

07/11/2016 16:02