2016-11-07 15:38:00

மனித சமுதாயத்தின் திறந்த காயம், மனித வர்த்தகம் - திருத்தந்தை


நவ.07,2016. வன்முறைகளால் துன்புறும் இவ்வுலகில், திறந்துகிடக்கும் பல்வேறு காயங்களுக்கு, நல்ல சமாரியரைப் போல் மருந்திட, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் காலை, தன்னைச் சந்திக்க வந்திருந்த பன்னாட்டு துறவிகளிடம் கூறினார்.

மனித வர்த்தகம் மற்றும் ஏனைய அநீதிகளுக்கு எதிராக உழைக்கும் இருபால் துறவியரின் ஐரோப்பியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இத்திங்கள் காலையில் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, RENATE என்ற பெயரில் இயங்கிவரும் இந்தக் கூட்டமைப்பு, இரக்கத்தின் யூபிலி ஆண்டில், தங்கள் ஆண்டு கூட்டத்தை, உரோம் நகரில் நடத்தியது, பொருத்தமாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

மனித சமுதாயத்தின் திறந்துகிடக்கும் காயங்களில், சவால்கள் நிறைந்த காயம், மனித வர்த்தகம் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, ஒவ்வொரு மனிதருக்கும் உரிய அடிப்படை மாண்பு, இந்த வர்த்தகத்தால் அழிக்கப்படுகிறது என்றும், இந்தக் காயத்தைக் குணமாக்க, அரசுகள், பன்னாட்டு நிறுவனங்கள், சமுதாய அக்கறை கொண்ட குழுக்கள் ஆகிய அனைத்தும் இணைந்து வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

மனித வர்த்தகத்திற்கு உட்பட்டோரை விடுவிப்பதோடு, அவர்களுக்கு மறுவாழ்வை அமைத்துத் தருவதிலும், RENATE அமைப்பினர், அர்ப்பண உணர்வோடு ஈடுபட்டிருப்பதைப் பாராட்டியத் திருத்தந்தை, இந்தப் பிரச்சனையைச் சந்திக்க மனமின்றி தங்கள் பார்வையைத் திருப்பிக்கொள்ளும் மனித சமுதாயத்தின் அக்கறையின்மை என்ற நோயைக் குணமாக்க தீவிர முயற்சிகள் தேவை என்று எடுத்துரைத்தார்.

மனித வர்த்தகம் மற்றும் ஏனைய அநீதிகளுக்கு எதிராக உழைக்கும் இருபால் துறவியரின் ஐரோப்பியக் கூட்டமைப்பு, தனது இரண்டாவது ஐரோப்பிய கூட்டத்தை, நவம்பர் 6 முதல் 12ம் தேதி முடிய உரோம் நகரில் நடத்தி வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.