2016-11-09 16:30:00

இறைவன் தன் இல்லத்தை ஆப்ரிக்காவில் அமைத்துள்ளார்


நவ.09,2016. இறைவன் நம்மிடையே தங்கியுள்ளார் என்பதையும், நம் வழியே, அவர் தேவையில் உள்ள அனைவரையும் சென்றடைகிறார் என்பதையும் நமக்கு நினைவுறுத்தும் திருநாள், புனித ஜான் லாத்தரன் பசிலிக்காவின் அர்ப்பணத் திருநாள் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், இப்புதனன்று மறையுரை வழங்கினார்.

நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள், நவம்பர் 7 இத்திங்கள் முதல், 10ம் தேதி, இவ்வியாழன் முடிய, ஆப்ரிக்காவின் சாம்பியா நாட்டில், மேற்கொண்டுள்ள  மேய்ப்புப்பணி பயணத்தில், நவம்பர் 9, இப்புதனன்று கொண்டாடப்பட்ட புனித ஜான் லாத்தரன் பசிலிக்காவின் அர்ப்பணத் திருநாள் திருப்பலியை, லுசாக்கா குழந்தை இயேசு பேராலயத்தில் நிறைவேற்றியபோது, இவ்வாறு மறையுரை வழங்கினார்.

நற்செய்தி அறிவிப்புப்பணியில் ஈடுபட்ட பல அருள்பணியாளர்கள், துறவியர் ஆகியோரின் முயற்சியால், ஆப்ரிக்காவின் பல நாடுகளில் இறைவன் தன் இல்லத்தை அமைத்துள்ளார் என்று, தன் மறையுரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் பிலோனி அவர்கள், இறைவன் நம் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் இன்று ஆலயமாக்கியுள்ளார் என்று எடுத்துரைத்தார்.

கடந்த 125 ஆண்டுகளாக இறைவனை ஏற்று வாழும் சாம்பியா நாடு, 'இம்மானுவேல்' அதாவது, இறைவன் நம்மோடு என்ற உண்மைக்கு சான்று பகரும் ஆலயங்களாக நாம் அனைவரும் வாழ வழிவகுத்துள்ளது என்று கர்தினால் பிலோனி அவர்கள் தன் மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.