2016-11-09 15:16:00

இது இரக்கத்தின் காலம்.. – நன்மை தீமையை, பகுத்துணரப் பழகுதல்


ஜிங்ஜு ஒரு வித்தியாசமான பிறவி. தான் ஆணழகனாய், அறிவுள்ளவனாய் பிறந்திருந்தால், இளவரசியை, திருமணம் செய்திருக்கலாம் என்று, பகல் கனவு காண்பவர். தன்னிடமுள்ள குறைகளை எண்ணி, எப்போதும் வருத்தத்திலேயே இருப்பவர். மருந்திற்கு கூட அவர் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடியாது. தெருவில் யாராவது சிரித்தால், அவர்கள் தன்னைப் பார்த்துதான் சிரிப்பதாக நினைத்துக் கொண்டு, கோபமடைந்து, அவர்களிடம் சண்டைக்குச் செல்வார். இறுதியில் ஒருநாள் தனது குணத்தை புரிந்துகொள்ள இயலாமல், ஜென் மாஸ்டரிடம் கேட்டு மனத் தெளிவடைய நினைத்தார்.

“யார் சிரித்தாலும் எனக்கு கோபம் வருகிறது. ஏன் அப்படி?” என்று மாஸ்டரிடம் கேட்டபோது, ஜென் மாஸ்டர், `ஹாஹா’ என்று சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார்.

ஜென் மாஸ்டர் எதற்கு சிரித்தார்? என்ற காரணம் புரியாமல் ஜிங்ஜு மிகவும் குழம்பினார். அதை நினைத்து, நினைத்து, மூன்று நாட்களாக ஊண் உறக்கமின்றி குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார்.

அடுத்த நாள் ஜென் மாஸ்டரிடம் சென்று, “அன்று என்னைப் பார்த்து ஏன் மாஸ்டர் சிரித்தீர்கள்? நான் வருத்தத்தில் மூன்று நாட்களாக சாப்பிடவே இல்லை” என்று கூறினார். உடனே ஜென் மாஸ்டர், “முட்டாளே! இப்போதாவது உனக்கு புரிகிறதா? நீ கோமாளியை விட சிறியவன், அது தான் உனது பிரச்சினை” என்று கூறினார். இதைக் கேட்ட ஜிங்ஜு அதிர்ந்து போனார்.

“நான் ஒரு கோமாளியை விட சிறியவன் என எக்காரணத்தால் குறிப்பிட்டீர்கள்?” என்று கோபத்துடன் கேட்டார்.

அதற்கு ஜென் மாஸ்டர், “கோமாளியாவது பிறர் சிரிப்பதைக் கண்டு மகிழும் தன்மையுடையவன். ஆனால் நீ மற்றவர்கள் சிரிப்பதை எண்ணி வருந்தி குழப்பத்துடன் இருக்கிறாய். இப்போது சொல், நீ கோமாளியை விட சிறியவன் தானே” என்றார்.

இதைக் கேட்ட ஜிங்ஜு தனது தவறை உணர்ந்து, குழப்பம் தீர்ந்த சந்தோஷத்தில் சிரித்தார்.

என்ன நடந்தாலும், அதனால் விளையும் நன்மையை மட்டும் எடுத்துக் கொண்டு மகிழும் தன்மை, வாழ்வில் மன அமைதி மற்றும் மகிழ்வைத் தரும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.