2016-11-09 15:07:00

இரக்கத்தின் தூதர்கள் : கர்ப்பிணித் தாய்மாரின் பாதுகாவலர்


நவ.09,2016. "கடவுளைத் தவிர வேறு எவரால் உங்களுக்கு அமைதியை அளிக்க முடியும்? இந்த உலகத்தால், என்றாவது உங்களின் இதயத்தை திருப்திபடுத்த முடிந்ததா? இல்லையே. எனவே நாம் உறுதியாக நம்ப வேண்டியவர் கடவுள் ஒருவரை மட்டும்". அன்பர்களே, இவ்வாறு சொன்னவர், கர்ப்பிணித் தாய்மாரின் பாதுகாவலர் எனப் போற்றப்படும் புனித ஜெரார்டு மஜெல்லா. இவர், இத்தாலியின் மூரோ எனும் ஊரில், 1726ம் ஆண்டில், மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். இவரோடு பிறந்தவர்கள் ஏழு பேர். இவருக்கு 12 வயது நடந்தபோது, இவரது தந்தை இறந்தார். அதனால், இவரது தாய் அவரை, இவரது மாமா வீட்டுக்கு அனுப்பினார். இவரின் தந்தையைப் போலவே, இவரும், தையல் தொழில் செய்வதற்காக, அதனைக் கற்றார். சில ஆண்டுகள் ஒருவரிடம் வேலை செய்து, தொழிலை நன்றாகக் கற்ற பின்னர், அவரே தனியாக, தையல் கடை வைத்தார். அதோடு, உள்ளூர் ஆயர் லாசிதோனியா அவர்களுக்கு, பணியாளாகவும் இருந்தார்.  இவருக்கு 12 வயது நடந்தபோது, ஆயர் இல்லத்தின் சாவியைக் கைதவறி கிணற்றில் போட்டு விட்டார். அச்ச நடுக்கத்துடன், ஒரு குழந்தை இயேசு திருஉருவத்தைக் கட்டி கிணற்றில் இறக்கினார். பின்னர், கயிறை மேலே இழுத்தபோது, இயேசுவின் கையில் அந்தச் சாவி இருந்தது. அவ்வளவு தூரம் இவர் இயேசுவில் நம்பிக்கை கொண்டிருந்தார்.  மஜெல்லாவுக்கு 21வது வயது நடந்தபோது, கூலிக்கு வேலை செய்யத் தொடங்கினார். அதில் கிடைத்த பணத்தை, மூன்று பாகமாகப் பரித்து, ஒரு பகுதியை தனது தாயிடமும், இன்னொரு பகுதியை, தனது ஊர் ஏழைகளுக்கும், மூன்றாவது பகுதியை, ஏழை ஆன்மாக்களின் ஆன்மா சாந்தியடையவும் என கொடுத்தார்.

நாள்கள் செல்லச் செல்ல, மஜெல்லா உடல்நலம் குன்றத் தொடங்கியது. அடிக்கடி நோன்பு இருந்தார். அருகிலுள்ள பேராலயத்தில் செபம் செய்தார். மூரோ ஊரிலிருந்த கப்புச்சின் துறவு ஆதீனத்தில் சேர்வதற்கு இருமுறை விண்ணப்பித்தார். அத்துறவியரின் கடும் தவ வாழ்வுக்கு, மஜெல்லாவின் உடல்நலம் ஒத்து வராது என்று சொல்லி, அவரை ஆதீனத்தில் ஏற்கவில்லை. ஆயினும், துறவியாக வேண்டுமென்ற முயற்சியைக் கைவிடவில்லை. இவர், 1749ம் ஆண்டில், தனது 23வது வயதில், உலக மீட்பர் சபையில் சேர்ந்தார். அங்கு, மூன்றாண்டுகள் பயிற்சி பெற்ற பின்னர், ஏழ்மை, கற்பு, பணிவு ஆகிய மூன்று வார்த்தைப்பாடுகளை எடுத்தார். குருவாக இல்லாமல், அருள்சகோதரராகவே சபையில் இருந்தார். ஏழைகளோடு மிகவும் நெருக்கமாக இருந்தார். ஆலயத்தில் திருப்பூட்டறைப் பணி, தோட்ட வேலை, சுமை தூக்கும் வேலை, நோயாளர் பராமரிப்பு, தையல் வேலை என, பல்வேறு பணிகளை ஆற்றினார். இவரிடம் விளங்கிய அசாதாரண பக்தி, ஞானம், பிறரின் மனச்சாட்சிகளை அறியும் கொடை ஆகியவற்றால், இவர், பல அருள்சகோதரிகளை வழிநடத்தி வந்தார். ஏழைகளும், நோயாளரும் மஜெல்லாவை அடிக்கடி உதவிக்கு அழைப்பார்கள். எங்கெல்லாம் இவரது உதவி தேவைப்பட்டதோ அங்கெல்லாம், இவர்,  "இது கடவுளின் விருப்பம்" என்ற உணர்வோடு விரைந்து சென்று, உதவினார்.   

புனித மஜெல்லா, வானில் பறத்தல், ஒரே நேரத்தில் இரு இடங்களில் இருத்தல், பிறரின் ஆன்மாவை அறிதல் உட்பட, சில, தியானயோகங்களால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார்.   இவரின் பிறரன்பு, தன்னலமற்ற சேவை, பெரியவர்க்குப் பணியும் பண்பு, கிறிஸ்துவுக்காகத் தியாகம் செய்தல் போன்றவை, எல்லாருக்கும் எடுத்துக்காட்டாக   இருந்தன. இவர் வாழ்ந்தபோதே பல அற்புதங்களை நிகழ்த்தினார். ஓர் உயர்ந்த குன்றிலிருந்து கீழே விழுந்த ஒரு சிறுவனுக்கு உயிர்பிச்சை அளித்தார். விளைந்த தானியங்களை, எலிகள் சேதப்படுத்தியதைத் தடுத்து நிறுத்தி, விவசாயிகளுக்கு வாழ்வளித்தார். ஓர் ஏழைக் குடும்பத்திலிருந்த கோதுமையை ஆசீர்வதித்ததன் வழியாக, அது அடுத்த அறுவடை வரை குறையாமல் இருந்தது. பல நேரங்களில் ஏழைகளின் உணவுகளைப் பலுகச் செய்துள்ளார். இப்படி பல புதுமைகளை ஆற்றியிருக்கிறார் புனித மஜெல்லா. ஒருமுறை, இவர், தன் நண்பரின் வீட்டிற்குச் சென்று திரும்பும்போது, தனது கைக்குட்டையை எடுக்க மறந்துவிட்டார். அப்போது, அவ்வீட்டு இளம்பெண் அதை நினைவுபடுத்தினார். அதற்கு மஜெல்லா, இதைப் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த ஆண்டில், இதே நாளில் இது தேவைப்படும் என்று சொல்லிச் சென்றார். பின்னர் அந்த இளம்பெண்ணுக்குத் திருமணமாகி, கர்ப்பம் தரித்தார். புனித மஜெல்லா சொல்லிச் சென்ற, அடுத்த ஆண்டு, அதே நாளில், அப்பெண்ணுக்குப் பிரசவ வலி எடுத்தது.  வலியால் துடிதுடித்தார். வயிற்றில் குழந்தை இறக்கும் நிலையில் இருந்தது. அப்போது அந்தக் கைக்குட்டை நினைவுக்கு வந்தது. அதை எடுத்துவரச் சொன்னார். அதை அப்பெண்ணின் அருகில் கொண்டு வந்தவுடன், அப்பெண்ணின் பிரசவ வலி உடனடியாக நின்றது. சுகப் பிரசவத்தில் ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தார். இதனால் புனித மஜெல்லா, கர்ப்பிணித் தாய்மாரின் பாதுகாவலராகப் போற்றப்படுகிறார். கருவில் வளரும் குழந்தைக்காக, தாய்மைப் பேறுக்காக, தவறாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையிலிருந்து மீள்வதற்காக.. என, பலரும் இப்புனிதரிடம் செபிக்கின்றனர்.

துறவு சபைகளில் சேர விரும்பும் இளம் பெண்களை வழிநடத்தும் பொறுப்பு புனித மஜெல்லாவுக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஒரு சபையில் சேர்ந்து, ஒருசில வாரங்களில் அச்சபையிலிருந்து விலகிய நெரியா என்ற இளம்பெண், தனது இயலாமையை மறைப்பதற்கு, ஓர் இளம் பெண்ணுக்கும், மஜெல்லாவுக்கும் தவறான உறவு இருப்பதாக, இல்லத் தலைவரிடம் புகார் செய்தாள். இதனை நம்பிய இல்லத் தலைவரும், மஜெல்லாவை வெளியே அனுப்பினார். திருநற்கருணை பெறவும் தடை விதித்தார். இது நடந்து சில நாள்களில், நெரியா என்ற அந்த இளம்பெண், கடும் நோயுற்று படுத்த படுக்கையானாள். தனது தவற்றை உணர்ந்து, அந்த இல்லத் தலைவருக்குக் கடிதம் எழுதினாள். தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டாள். இதனால் புனித மஜெல்லா தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

புனித ஜெரார்டு மஜெல்லா, காசநோயால் தாக்கப்பட்டார். இவர், ஆறு ஆண்டுகள் துறவு வாழ்வை வாழ்ந்த பின்னர், தனது 29வது வயதில், 1755ம் ஆண்டு, அக்டோபர் 16ம் நாள் இறைவனடி சேர்ந்தார். 1904ம் ஆண்டு, டிசம்பர் 11ம் தேதி புனிதராக அறிவிக்கப்பட்டார். ஏழை எளியவர்மீது இரக்கம் காட்டி, ஆழ்ந்த இறைநம்பிக்கையில் வாழ்ந்தவர் புனித ஜெரார்டு மஜெல்லா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.