2016-11-09 16:21:00

'இறைவா, உமக்கேப் புகழ்' திருமடல், UNESCO தலைமையகத்தில்


நவ.09,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'இறைவா, உமக்கேப் புகழ்' என்ற திருமடலை, UNESCO தலைமையகத்தில் அனைவரோடும் இணைந்து சிந்திப்பது, மகிழ்வைத் தருகிறது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

'இறைவா, உமக்கேப் புகழ் - நமது பொதுவான இல்லத்தைப் பேணுதல்' என்ற தலைப்பில், பாரிஸ் மாநகரில் உள்ள UNESCO தலைமையகத்தில் நடைபெறும் ஒரு கருத்துப் பரிமாற்றத்தில், இப்புதன் காலை உரையாற்றிய, திருப்பீட நீதி, அமைதி அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இவ்வாறு கூறினார்.

மனிதர்கள் உட்பட, படைப்பு அனைத்தும், ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன என்ற கருத்து, இத்திருமடலை வாசிக்கும் அனைவர் உள்ளங்களிலும் பதிந்துள்ளது என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

இவ்வுலகம் எழுப்பும் அழுகுரலையும், வறியோர் எழுப்பும் அழுகுரலையும் கேட்பதற்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம், குறிப்பாக, இந்த அழுகுரல்களைக் கேட்பதில் இனி தாமதம் செய்யக்கூடாது என்ற அவசர அழைப்பை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருமடல் வழியே வெளியிட்டுள்ளார் என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள், UNESCO தலைமையகத்தில் வழங்கிய உரையில் வலியுறுத்திக் கூறினார்.

திருப்பீடத்தின் சார்பில் UNESCO தலைமையகத்தில் பணியாற்றும் பிரதிநிதிகள் குழுவும், திருப்பீட நீதி, அமைதி அவையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கருத்துப் பரிமாற்றத்தில், UNESCO தலைமை இயக்குனர் இரீனா பொக்கோவா மற்றும் கர்தினால் டர்க்சன் ஆகியோர் கருத்துரைகள் வழங்கினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.