2016-11-09 16:10:00

திருத்தந்தையின் இரக்க வெள்ளிக்கிழமை அனுபவங்கள்


நவ.09,2016. கண்ணீர், செபங்கள் ஆகியவற்றைக் காட்டிலும், மற்றவர்களின் துயரங்களுக்குச் செவிகொடுத்து கேட்டது, திருத்தந்தையின் இரக்க வெள்ளிக்கிழமை அனுபவங்களில் வெளிப்பட்டது என்று, CNS கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

நடைபெறும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், ஒவ்வொரு மாதத்தின் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் இரக்கச் செயல் ஒன்றில் ஈடுபடப் போவதாக அறிவித்ததை, ஒவ்வொரு மாதமும் நடைமுறைப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துயருறும் மக்களுக்கு ஆனந்த அதிர்ச்சிகளை வழங்கிவந்தார் என்று CNS செய்தி மேலும் கூறுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு, அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டிசம்பர் 18ம் தேதி, உரோம் நகரில், காரித்தாஸ் அமைப்பு நடத்திவரும் வீடற்றோர் விடுதிக்கு திருத்தந்தை சென்று, அங்கு புனிதக் கதவைத் திறந்து வைத்து திருப்பலியாற்றினார்.

இதைத் தொடர்ந்து, வயது முதிர்ந்தோர் இல்லம், போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து விடுபட முயற்சி செய்வோர் இல்லம், ஆகியவற்றிற்கு அறிவிப்பு ஏதுமின்றி சென்ற திருத்தந்தை, மார்ச் மாதம், புனித வியாழன் திருப்பலியை, புலம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றில் நிறைவேற்றினார்.

ஏப்ரல் மாதம், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையுடனும், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையுடனும், கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ளோரைச் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து திரும்பி வந்தபோது, அம்முகாமிலிருந்து, 12 புலம் பெயர்ந்தோரை தன்னுடன் உரோம் நகருக்கு அழைத்து வந்தார்.

பணிஓய்வு பெற்ற அருள்பணியாளர்கள் இல்லத்திற்குச் சென்றது, பாலியல் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட பெண்களைச் சந்தித்தது, மனநலம் குன்றியவர்களைச் சந்தித்தது ஆகியவை, திருத்தந்தையின் இரக்க வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்ற நிகழ்வுகளாக அமைந்தன.

ஊடகத்துறையினரின் பிரசன்னம் ஏதுமின்றி திருத்தந்தை மேற்கொண்ட இந்த முயற்சிகளில், கண்ணீர், செபங்கள், துயர அனுபவங்களின் பகிர்வுகள் இடம்பெற்றன என்று CNS செய்தி மேலும் கூறுகிறது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.