2016-11-09 16:48:00

பழங்குடியினரை குடும்பத்தின் உறுப்பினர்களாக நடத்தும் மும்பை


நவ.09,2016. சோட்டாநாக்பூர் பகுதி பழங்குடியினரை விருந்தாளிகள் போல நடத்தாமல், குடும்பத்தின் உறுப்பினர்கள் போன்று நடத்தும் மும்பை பேராயர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்களுக்கு, இராஞ்சி பேராயர், கர்தினால் டெலெஸ்போர் டோப்போ அவர்கள், நன்றி கூறினார்.

சோட்டாநாக்பூர் பகுதியிலிருந்து மும்பை நகருக்கு பிழைப்பு தேடி வந்துள்ள பழங்குடியினரை ஒருங்கிணைத்து, மும்பை உயர் மறைமாவட்டம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டோருக்கு, பாந்திரா புனித பேதுரு ஆலயத்தில் திருப்பலியாற்றிய கர்தினால் டோப்போ அவர்கள் இவ்வாறு கூறினார்.

தங்கள் பகுதியில் நிலவும் வறட்சி, வறுமை காரணமாக, மும்பை பெருநகருக்கு வாய்ப்பு தேடி வந்துசேரும் பல பழங்குடியினர், பல்வேறு வழிகளில் சுரண்டப்படுவதைத் தடுக்க, கர்தினால் கிரேசியஸ் அவர்களின் மேற்பார்வையில், மும்பை உயர் மறைமாவட்டம் கருத்தரங்கு ஒன்றை அண்மையில் நடத்தியது.

சோட்டாநாக்பூர் பகுதியிலுள்ள மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிஸ்ஸா, சட்டிஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து, மும்பை நகரில் குடியேறியுள்ள பழங்குடியினரின் எண்ணிக்கை, 80,000த்திற்கும் அதிகம் என்றும், இவர்களில் 5000த்திற்கும் அதிகமானோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர் என்றும், ஆசிய செய்தி கூறுகிறது.

பழங்குடியினரின் ஆன்மீக, பொருளாதார, சமுதாய, கலாச்சாரத் தேவைகளை மனதில் கொண்டு, அவர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள ஐந்து அம்சத் திட்டங்கள் குறித்து, ஆசிய ஆயர் பேரவைகளின் தலைவர், கர்தினால் கிரேசியஸ் அவர்கள், ஆசிய செய்தியிடம் விளக்கிக் கூறினார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.