2016-11-15 16:21:00

உலக கடல்தொழிலாளர் தினத்திற்கு திருப்பீடம் செய்தி


நவ.15,2016. மீன்பிடிப் படகுகளில் பணியாற்றுவோர், மற்றும், மீனவர்களுக்கு, பாதுகாப்பான ஒரு பணிச்சூழலை உருவாக்கிக் கொடுக்கும் விதமாக, 2007ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட உலக மீன்பிடித்தொழில் ஒப்பந்தம் செயல்படுத்தப்படுமாறு, உலக அரசுகளுக்கு விண்ணப்பித்துள்ளது, திருப்பீடம்.

நவம்பர் 21, வருகிற திங்களன்று கடைப்பிடிக்கப்படும் உலக கடல்தொழிலாளர் தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள, புலம்பெயர்வோர் மற்றும் பயணம் செய்வோர்க்கு மேய்ப்புப் பணியாற்றும் திருப்பீட அவை, மீன்பிடிப் படகுகளில், புலம்பெயர்வோர், வேலை செய்வதற்கு கட்டாயப்படுத்தப்படுவதையும் குறிப்பிட்டுள்ளது.

வறுமையினால் வேலைதேடி அலையும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர்,  குற்றக்கும்பல் அமைப்புகள் மற்றும் தனிநபர்களால், கடத்தப்பட்டு, மீன்பிடித் தொழிலில் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்றும், இம்மக்களின் வாழ்வு, இறுதியில், கொத்தடிமை, அடிமைமுறை மற்றும் மனித வர்த்தகத்தில் முடிகின்றது  என்றும், கவலையை வெளியிட்டுள்ளது, அத்திருப்பீட அவை.

மனித வர்த்தகம், மனித சமுதாயத்திற்கெதிரான குற்றம் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவருவதைக் கோடிட்டுக் காட்டியுள்ள அச்செய்தி, மனித வர்த்தகத்தை நிறுத்துவதற்கு,  கத்தோலிக்கத் திருஅவை, தனது அழைப்பை மீண்டும் புதுப்பிக்கின்றது என்றும் கூறுகிறது.

உலகில், கோடிக்கணக்கான மக்களுக்கு உணவும், உலகளவில், ஐந்து கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்குகின்ற, பெருங்கடல்கள் மற்றும் கடல் தொழிலாளரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கத்தில், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 21ம் தேதி, உலக கடல்தொழிலாளர் தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

இச்செய்தியில், புலம்பெயர்வோர் மற்றும் பயணம் செய்வோர்க்கு மேய்ப்புப் பணியாற்றும் திருப்பீட அவைத் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò, அதன் நேரடிச் செயலர் அருள்பணி Gabriele Bentoglio ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.