2016-11-15 16:28:00

ஐ.நா.வின் காலநிலை மாற்றம் கூட்டத்திற்கு திருத்தந்தை செய்தி


நவ.15,2016. மொரோக்கோ நாட்டின் மராக்கேஷ் நகரில் நடைபெற்றுவரும், ஐ.நா.வின் காலநிலை மாற்றம் குறித்த இரண்டாவது அமர்வில் (COP22) பங்குகொள்ளும் பிரதிநிதிகளுக்கு, வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மாதம் 7ம் முதல் 18ம் தேதி வரை, மொரோக்கோ அரசின் ஆதரவுடன் நடைபெறும், இந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகிக்கும், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் SALAHEDDINE MEZOUAR அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், நம் பொதுவான இல்லத்தைப் பராமரிப்பதில், உலகினர் அனைவருக்கும் இருக்கின்ற பொறுப்பைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்காலத்திய சுற்றுச்சூழல் சீர்கேடு, மனித, சமூக மற்றும் நன்னெறிச் சீர்கேடுகளுடன் வலுவான தொடர்பு கொண்டுள்ளது என்றும், இதன் பாதிப்பை, நாம் ஒவ்வொரு நாளும் அனுபவித்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளத் திருத்தந்தை, இந்த அனுபவமே, புதுப்பிக்கப்பட்ட விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வுடன் இக்கூட்டத்திற்கு எல்லாரையும் அழைத்து வந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

காலநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தம், ஒட்டுமொத்த உலகளாவிய சமுதாயத்தையே தெளிவாக ஈடுபடுத்தியுள்ளது என்றும், காலநிலை பாதிப்பால் துன்புறும், மிகவும் நலிந்த மக்களுடன், ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டுவதற்கு, இந்த ஒப்பந்தம் அழைப்பு விடுக்கின்றது என்றும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.