2016-11-15 16:17:00

ஒப்புரவு அருளடையாளத்தில் நம் வாழ்வு மாற்றம் பெறுகிறது


நவ.15,2016. இறைவனின் மன்னிப்பு மற்றும் இரக்கம் எனும் கொடைகளை நாம் பெறுகின்ற இடம் ஒப்புரவு அருளடையாளம் என்றும், இந்த அருளடையாளத்தில், நம் ஒவ்வொருவரின் வாழ்வு மாற்றமடையத் தொடங்குகின்றது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஹாலந்து கத்தோலிக்கரிடம் கூறினார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஹாலந்து நாளை முன்னிட்டு, உரோமைக்குத் திருப்பயணம் மேற்கொண்ட, ஏறக்குறைய இரண்டாயிரம் ஹாலந்து நாட்டு கத்தோலிக்கரை, இச்செவ்வாய் முற்பகலில், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் சந்தித்து உரையாற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புரவு அருளடையாளம், திருஅவையின் வாழ்வைச் சீர்திருத்துகின்றது என்றும் கூறினார்.

ஹாலந்து நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களிலிருந்து, கத்தோலிக்கர், தங்களின் ஆயர்களுடன், யூபிலித் திருப்பயணம் மேற்கொண்டிருப்பது, அந்நாட்டுத் திருஅவை, திருத்தந்தையுடன் கொண்டுள்ள ஒன்றிப்பை எடுத்துக் காட்டுகின்றது என்று, தனது  பாராட்டையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டு, இறைத்தந்தையின் இரக்கமுள்ள முகமாகிய இயேசு கிறிஸ்துவுடன் நம் உறவை மேலும் மேலும் ஆழப்படுத்த உதவுகின்றது என்றும், இறையன்பின் இந்த மாபெரும் பேருண்மை என்றுமே வற்றாதது என்றும், நமக்கும், இந்த உலகத்திற்கும் தேவைப்படும் மீட்பின் ஊற்றாக, இறையன்பு உள்ளது என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.

இறைவனின் இரக்கத்திற்கு இதயங்களைத் திறந்து, அதனால் வடிவமைக்கப்படவும், இரக்கத்தின் கருவிகளாக மாறவும், தம் மன்னிப்பை எப்போதும் வழங்கும் இரக்கமுள்ள இறைத்தந்தையின் அன்பிற்கு, அன்றாட வாழ்வில் சாட்சிகளாக விளங்கவும் வேண்டுமெனவும், திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

இக்கால மனிதர்கள், இறைவன் மீதும், அவரின் அன்பு மற்றும், நன்மைத்தனத்தின் மீதும் தாகம் கொண்டுள்ளனர், அதற்கு, இரக்கத்தின் வாய்க்கால்களாக, அவர்களின் தாகத்தைத் தணித்து, இயேசுவை அவர்கள் மீண்டும் கண்டுணர, உதவ முடியும் என, ஹாலந்து கத்தோலிக்கரிடம், இச்செவ்வாயன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்செவ்வாயன்று, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், ஹாலந்து கத்தோலிக்கருக்கு நிறைவேற்றப்பட்ட திருப்பலியின் இறுதியில், அவர்களைச்  சந்தித்து இவ்வாறு உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.