2016-11-15 16:32:00

கேரளா : பணமில்லாத மக்களுக்கு உதவும் பங்கு ஆலயம்


நவ.15,2016. இந்தியாவில், பழைய 500, 1000 ரூபாய் தாள்களை மாற்றி புதிய ரூபாய் தாள்களைப் பெறுவதற்காக, வங்கிகளில் மக்கள் அலைமோதிவரும் இந்நாள்களில், ஏழை மக்களுக்கு உதவும் நோக்கத்தில், கேரள மாநிலத்தில் ஒரு கத்தோலிக்க ஆலயத்தில், உண்டியல் பெட்டிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம், தேவையான பணத்தினை ஏ.டி.எம். மையத்தில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஏ.டி.எம். மையங்களில் போதிய பணம் இல்லை. இதனால் மக்கள் அனைவரும், நூறு ரூபாய் நோட்டுகளுக்காக மணிக்கணக்கில், வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.

இந்நிலையில், கேரளாவின் எர்ணாகுளம் தூய மார்ட்டின் டி போரெஸ் பங்கு ஆலயத்தில், நவம்பர் 13, இஞ்ஞாயிறு காலை 6.30, 8.30 மணி திருப்பலிகளில் அறிவிக்கப்பட்ட பின்னர், உடனடியாகப் பணம் தேவைப்படுபவர்க்கென, பத்து ரூபாய், ஐம்பது ரூபாய் நோட்டுகள் கொண்ட, இரு உண்டியல் பெட்டிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மக்கள், இப்பெட்டிகளிலிருந்து எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம், எப்போது அவர்களால் முடியுமோ அப்போது, பணத்தை ஆலயத்திற்குத் திருப்பிக் கொடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டு, பெட்டிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நடவடிக்கை குறித்துப் பேசிய ஆலய இளையோர் நிர்வாகக்குழுவின் ஷெல்சன் பிரான்சிஸ் அவர்கள், யார் எவ்வளவு பணம் எடுக்கிறார்கள் என்பதை நாங்கள் கவனிப்பதில்லை, ஆயினும், இந்தப் பெட்டிகள், பெரும்பாலும் பத்து ரூபாய், ஐம்பது ரூபாய் நோட்டுகளால் நிரப்பப்பட்டுள்ளன என்று, கூறியுள்ளோம் என்று தெரிவித்தார்.

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று, நவம்பர் 8, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புக்குப் பிறகு வங்கிகள் மீண்டும் செயல்பட துவங்கியதில் இருந்து பழைய ரூபாய் தாள்களை மாற்றி புதிய ரூபாய் தாள்களை பெற மக்கள் வங்கிகளில் அலை மோதி வருகின்றனர்.

ஆலயத்தின் இந்த அற்புத சேவை அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில்லறை இல்லாமல் மக்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காவே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாக அப்பங்கு குரு ஜிம்மி கூறியுள்ளார்.

ஆதாரம் : India Today /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.