2016-11-16 15:44:00

அமெரிக்க ஆயர் பேரவைக்கு திருத்தந்தையின் காணொளிச் செய்தி


நவ.16,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலத்திருஅவை, பல நூற்றாண்டுகளாக, தங்கள் நாட்டை வந்தடையும் புலம் பெயர்ந்தோரை வரவேற்று, அவர்களை, தங்கள் சமுதாயத்தின் ஓர் அங்கமாக இணைத்துள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

நவம்பர் 14 இத்திங்கள் முதல், 17 இவ்வியாழன் முடிய அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் நடைபெறும் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் பொது அமர்வுக்கு திருத்தந்தை அனுப்பிய காணொளிச் செய்தி, இச்செவ்வாய் மாலையில் அங்கு ஒளிபரப்பப்பட்டது.

சென்ற ஆண்டு, தான் அந்நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது, அந்நாட்டில், துடிப்புடன் செயலாற்றும் கத்தோலிக்க சமுதாயத்தின் பன்முகத் தன்மை, தன்னை அதிகம் கவர்ந்ததென்று, திருத்தந்தை, இக்காணொளிச் செய்தியின் ஆரம்பத்தில் கூறியுள்ளார்.

அமெரிக்க மண்ணில் காலடி பதித்த அனைத்து நாட்டவரும் அந்நாட்டின் கலாச்சாரத்திற்கும், தலத்திருஅவையின் வாழ்வுக்கும் மிகுந்த பங்களித்துள்ளனர் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சந்திக்கும் கலாச்சாரத்தை வளர்ப்பது நமக்கு முன்னிருக்கும் பெரும் சவால் என்று தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2018ம் ஆண்டு சனவரியில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களிலும், Encuentro என்றழைக்கப்படும் '5வது தேசிய இஸ்பானிய மேய்ப்புப்பணி சந்திப்பு' நடைபெறவிருப்பது குறித்து தன் மகிழ்வை வெளியிட்டுள்ள திருத்தந்தை, சுவர்களைத் தகர்த்து, பாலங்களைக் கட்டுவது இன்றைய உலகிற்கு அடிப்படையான தேவை என்று இக்காணொளிச் செய்தியில் எடுத்துரைத்துள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறியுள்ள இஸ்பானிய சமுதாயம், அந்நாட்டிற்கும், குறிப்பாக, கத்தோலிக்க சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் ஆற்றியிருக்கும் பணிகளை, Encuentro கூட்டங்கள் உறுதி செய்யும் என்று தான் நம்புவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்க ஆயர் பேரவைக்கு அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.