2016-11-16 16:38:00

திருத்தந்தையின் தூண்டுதலால் 787 கைதிகளுக்கு மன்னிப்பு


நவ.16,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரக்கத்தை மையப்படுத்தி விடுத்துவரும் அழைப்புகளுக்கு இசைந்து, கியூபா நாட்டில், இச்செவ்வாயன்று, 787 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

விடுவிக்கப்பட்ட இக்கைதிகளில் பலர், பெண்கள், இளையோர் மற்றும், நோயுற்றோர் என்றும், கொடுமையான தவறுகள் செய்தவர்கள் யாரும் விடுவிக்கப்படவில்லை என்றும், அரசு அறிவிப்பு கூறியுள்ளது.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி, கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து அரசுத் தலைவர்களுக்கும் விடுத்த அழைப்பிற்கு இணங்க, கியூபா அரசுத்தலைவர், ரவுல் காஸ்ட்ரோ அவர்கள், இந்த முடிவை அறிவித்தார் என்று, அந்நாட்டு செய்தித்தாளான Granma அறிவித்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் கியூபா நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், 3,500க்கும் அதிகமான கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.