2016-11-16 15:56:00

யுனெஸ்கோ விருது விழா 20ம் ஆண்டிற்கு திருத்தந்தையின் செய்தி


நவ.16,2016. அமைதியை அடைவதற்கு புதிய வழிகளைச் சிந்திக்க, யுனெஸ்கோ தலைமையகத்தில் கூடியிருக்கும் அனைவரையும் வாழ்த்துவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

Focolare இயக்கத்தை உருவாக்கிய Chiara Lubich அவர்களுக்கு, 1996ம் ஆண்டு, பாரிஸ் மாநகரில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில், "அமைதிக்கான கல்வி" என்ற விருது, வழங்கப்பட்டது.

அந்நிகழ்வின் 20ம் ஆண்டு நிறைவை, திருப்பீடத்தின் சார்பில் யுனெஸ்கோவில் பணியாற்றும் பிரதிநிதிகள் குழுவும், Focolare இயக்கமும் இணைந்து, யுனெஸ்கோ தலைமையகத்தில், நவம்பர் 15, இச்செவ்வாயன்று கொண்டாடிய வேளையில், திருத்தந்தையின் செய்தி அங்கு வாசிக்கப்பட்டது.

"அமைதியை மீண்டும் கண்டுபிடிக்க - மனித குடும்பத்தை ஒருங்கிணைக்கும் கல்வியைப் புகட்ட" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த 20 ஆண்டு நிறைவு விழாவிற்கு தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ள திருத்தந்தை, Chiara Lubich அவர்கள் துவக்கிய பணியை, Focolare இயக்கம் தொடர்ந்து ஆற்றிவருவதற்கு தன் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

ஒருவர் ஒருவர் மீது மதிப்பு கொள்ளுதல், அடுத்தவருக்குச் செவிமடுத்தல், பிறர் தேவைகளை உணர்தல் போன்ற பண்புகளே இவ்வுலகில் அமைதியை வளர்க்க முடியும் என்று, திருத்தந்தையின் செய்தி வலியுறுத்துகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.